ஜெயலலிதா நினைவு நாள்... ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்த ஓபிஎஸ் திட்டம்
- வருகிற 5-ந்தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினம்.
- சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தப்படும்.
சென்னை:
அ.தி.மு.க. உரிமை மீட்பு குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதற்கேற்ப, மக்களுக்கான நலத் திட்டங்களை வழங்கி கண் இமை போல் மக்களைக் காத்து தன்னையே தமிழ்நாட்டு மக்களுக்காக அர்ப்பணித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு பொற்கால ஆட்சியை வழங்கி, இன்றளவும் மக்களின் மனங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. நிரந்தரப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மாவுக்கு 8-ம் ஆண்டு நினைவு நாளான 05-12-2024 (வியாழக்கிழமை) காலை 10-30 மணியளவில் சேப்பாக்கம், அரசு விருந்தினர் இல்லத்திலிருந்து ஊர்வாமாக புறப்பட்டு சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள புரட்சித் தலைவி அம்மாவின் நினைவிடத்தில் கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்துவார்.
இதன் தொடர்ச்சியாக, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்துவார்கள். இதனைத் தொடர்ந்து, நினைவிட வளாகத்தில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்படும்
மேற்படி நிகழ்ச்சியில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதி வட்ட கிளை அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி கொண்டிருக்கும் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு அம்மா அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.