களியக்காவிளை விபத்தில் 3 பேர் பலி - அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு
- 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
- பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
கன்னியாகுமரி :
களியக்காவிளை அருகே மெதுகும்பல் பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 30). வெளிநாட்டில் கட்டிட வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுபிஜா (27) இவர்களது மகள் அஸ்வந்திகா (3). இவர்கள் தற்பொழுது களியக்காவிளை அருகே கூட்டப்புளி பகுதியில் வசித்து வந்தனர்.
வெளிநாட்டிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருள்ராஜ் ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலை அருள்ராஜ், சுபிஜா மற்றும் மகள் அஸ்வந்திகாவுடன் மோட்டார் சைக்கிளில் குழித்துறையில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக சென்றனர். அங்கு உறவினரை பார்த்துவிட்டு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர்.
குழித்துறை கல்லுக்கட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அருள்ராஜ் சுபிஜா, அஸ்வந்திகா 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.
இதுகுறித்து களியக்கா விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விபத்து குறித்து அரசு பஸ் டிரைவர் மகேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
பலியான சுபிஜா 3 மாத கர்ப்பிணியாகவும் இருந்து உள்ளார். ஒரே குடும்பத்தில் 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியான 3 பேர் உடல் பிரேத பரிசோதனை இன்று குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நடக்கிறது. அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.