தி.மு.க. உண்ணாவிரதம் நடத்துவது நாடகம்
- நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. உண்ணாவிரதம் நடத்துவது நாடகம் என ஆர்.பி. உதயகுமார் கூறினார்.
- முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.
மதுரை
மதுரையில் ஆட்டோ தொழிலாளருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும், சந்திரயான் 3 வெற்றி பெற்றதை முன்னிட்டு கேக் வெட்டும் நிகழ்ச்சி தமிழ்நாடு சேம்பர் ஆப் காமர்ஸ் நடைபெற்றது.
இதற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் தலைமை தாங்கினார். நலத்திட்ட உதவிகளை வழங்கி கேக் வெட்டி இனிப்புகளை ஆட்டோ தொழிலாளர் களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
நிலவில் சந்திரயான் 1-ஐ மயில்சாமி என்ற தமிழர் அனுப்பினார். அதனைத் தொடர்ந்து சந்திரயான் 2-ஐ வனிதா என்ற தமிழர் அனுப்பினார். தற்போது சந்திரயான் 3-ஐ நிலவில் அனுப்பிவெற்றி பெற்றுள்ளது. அதை விழுப்புரத்தைச் சேர்ந்த தமிழர் வீர முத்துவேல் அனுப்பி இன்றைக்கு உலக பெருமையை தமிழகத்திற்கு கிடைக்க செய்துள்ளார்.
நிலவின் தென் துருவம் ஆபத்தான பகுதியாகும். அதை சாதித்து காட்டியது நமக்கு பெருமையாகும் அதனைத் தொடர்ந்து புரட்சித் தமிழர் எடப்பாடி யார் இதற்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகளை வழங்கினார். தற்போது அவரின் ஆணைக்கிணங்க தற்போது கேக் வெட்டி இனிப்புகளை வழங்கப் பட்டது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த வுடன் நீட்டை ரத்து செய்யும் கையெழுத்தை போடுவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு தற்போது பச்சைப்பொய் பேசுகிறார் கள்.
இதே எடப்பாடியார் காலத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு பெறவேண்டும் என்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தார். மேலும் தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ் மருத்துவமனையை பெற்று தந்தார். ஆனால் இன்றைக்கு தி.மு.க. பச்சை பொய் பேசுவதை வாழ்க்கை யாகவும், அரசியல் கடமை யாகவும் கூறிவருகிறது.
தி.மு.க. அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. உண்ணாவிரத போராட்டம் என்ற பெயரில் நாடகம் நடத்தி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்கள்.
நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று கூறி மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றி உள்ளனர், தற்போது ராகுல் பிரதமர் வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வார் என்ற ரகசியத்தை கூறுகிறார்கள். ராகுல் என்றைக்கு பிரதமராக வருவது, நீட்டை எப்போது ரத்து செய்வது. இப்படி பச்சைபொய் பேசுவது ஏமாற்று நாடகமாகும். இதில் உண்மை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.