உள்ளூர் செய்திகள்

பாசனத்திற்காக திறக்கப்பட்ட மணிமுத்தாறு அணை தண்ணீர் வராததால் கருகிய நெற்பயிர்கள்- சாத்தான்குளம் பகுதி விவசாயிகள் வேதனை

Published On 2023-01-24 09:17 GMT   |   Update On 2023-01-24 09:17 GMT
  • மணிமுத்தாறு அணை மூலம் சுமார் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகிறது.
  • 12-ந்தேதி அணைக்கட்டில் இருந்து 80 அடி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

செய்துங்கநல்லூர்:

மணிமுத்தாறு அணைக்கட்டு மூலம் நெல்லை- தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெற்று வருகிறது. இதில் நான்கு 1, 2, 3, 4 என 4 ரீச் மூலம் பாசனம் வசதியை வரையறுத்து உள்ளனர். 118 அடி கொள்ளளவு கொண்ட இந்த மணிமுத்தாறு அணையில் பெருங்கால் பாசனம், நேரடி பாசனம், தாமிரபரணி பாசனம் என 3 வகையான பாசன விவசாயத்து தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நேரடி பாசனம் மூலமாக நெல்லை மாவட்டத்தில் வைராவிகுளம், ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம், பொட்டல் பகுதியில் உள்ள 2,600 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கால்வாயை பொறுத்தவரை வருடத்தில் 9 மாதங்கள் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

80 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் மட்டும் நான்கு ரீச்களுக்கு தண்ணீர் வழங்கப்படும். ஒரு வருடம் முதல் இரண்டு ரீச்களுக்கும், மறு வருடம் கடைசி இரண்டு ரீச்களுக்கும் தண்ணீர் வழங்கப்படும்.

கடந்த வருடம் போதிய மழை இல்லாத காரணத்தினால் மணிமுத்தாறு பாசனத்தில் விவசாயப்பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டது.

கடந்த வருடம் இறுதியில் மணிமுத்தாறு அணையில் 3 மற்றும் 4-வது ரீச்சில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ராதாபுரம், திசையன்விளை மற்றும் சாத்தான்குளம் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி மணிமுத்தாறு அணையில் இருந்து 3 வது மற்றும் 4-வது ரீச்சில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து கடந்த 12-ந்தேதி மணிமுத்தாறு அணைக்கட்டில் இருந்து 80 அடி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. தினமும் 400 கனஅடி நீர் வீதம் தண்ணீர் இந்த கால்வாய் மூலம் வெளியேற்றப்பட்டது.

நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், சாத்தான்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த தண்ணீர் கொண்டு பயன்படுத்தப்படும் என பொதுப்பணித்துறையினர் அறிவித்து இருந்தனர்.

திட்டமிட்டது ஒன்று நடப்பது வேறென்று என்பது போல் தற்போது விவசாயிகள் எதிர்பார்த்தது நடைபெறவில்லை. தண்ணீர் திறக்கப்பட்டு 10 தினங்களுக்கு மேல் ஆகியும் தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குள் மணிமுத்தாறு தண்ணீர் வந்து சேரவில்லை. விவசாயிகள் மணிமுத்தாறு தண்ணீரை நம்பி பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் அனைத்தும் கருகியது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். தங்கள் கண் முன்னால் காயும் பயிரை காப்பாற்ற வழித்தெரியாமல் கருகிய நெற்பயிரில் கால்நடைகளை விட்டு மேய்த்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட இறுதி எல்லையான சிந்தாமணி வரை மணிமுத்தாறு தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் ஆரம்ப எல்லையான மீரான்குளம் குளத்திற்கு வரும் வழியிலேயே தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. இது தூத்துக்குடி மாவட்ட மணிமுத்தாறு பாசன விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மணிமுத்தாறு தண்ணீர் பாயும் பகுதிகளில் தூர்வாரப்பட்டு சுமார் 35 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. கால்வாய் கரைகள் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கடைசி வரை செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாத்தான்குளம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குளங்கள் காய்ந்து கிடக்கிறது. மேலும் தாமிரபரணி பாசனத்தில் மருதூர் மேலக்கால்வாயில் இருந்து பிரிந்து செல்லும் சடையநேரி கால்வாய் மூலம் குறைந்த அளவிலேயே தண்ணீர் செல்வதால் அங்கேயும் அரசு சுமார் சுமார் 20 கோடிக்கு மேல் செலவழித்தும் பலனில்லாமல் உள்ளது. தற்போது தாமிரபரணி வெள்ளக்கால்வாய் திட்டமும் எந்தவிதத்தில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு கை கொடுகக போகிறது என்பது முழுமையாக தெரியவில்லை.

இந்த பகுதி விவசாயிகளுக்கு தாமிரபரணி மற்றும் மணிமுத்தாறு பாசனம் என இரண்டு பாசனம் இருந்தும் கூட விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தான் வளர்த்த பயிர்களை தனது கால்நடைகளை வைத்து விவசாயிகளே தனது கண் முன் அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மணிமுத்தாறு ஆற்றின் 80 அடி கால்வாயை விரிவுபடுத்தி சீரமைக்க வேண்டும். மணிமுத்தாறு தண்ணீரை முறையாக பகிர்மானம் செய்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுககு கொடுக்க ஆவண செய்ய வேண்டும் என இரு மாவட்ட விவசாயிகளும் கோரிககை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News