மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில்: டிசம்பர் 25 முதல் 2-ந்தேதி வரை பயணிக்கலாம்
- சிறப்பு மலை ரெயில் 6 நாட்கள் இயக்கப்படும்.
- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து தினசரி ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயிலில் உள்ளூர் மட்டுமல்லாமல், வெளிமாவட்டம், வெளிமாநில, மாவட்ட மக்களும் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவார்கள்.
இந்த நிலையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை விடுமுறையையொட்டி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து கேத்திக்கும் தினசரி 3 முறையும் மலை ரெயில் இயக்க சேலம் கோட்ட ரெயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திலிருந்து வரும் டிசம்பர் மாதம் 25, 27, 29, 31 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்கு சிறப்பு மலை ரெயில் புறப்பட்டு ஊட்டிக்கு மதியம் 2.25 மணிக்கு செல்லும்.
இதேபோல் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு வரும் டிசம்பர் மாதம் 26, 28, 30 மற்றும் வரும் ஜனவரி மாதம் 1-ந் தேதி வரை சிறப்பு மலைரெயில் இயக்கப்படும்.
ஊட்டியில் இருந்து காலை 11.25 மணிக்கு ரெயில் புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு மாலை 4.20 மணிக்கு வந்தடையும். இதனிடையே மேட்டுப்பாளையம்-குன்னூர் வரை முதல் வகுப்பில் 40 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 140 இருக்கைகள் இருக்கும்.
இதேபோல் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வரும் டிசம்பர் 28-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 2-ந் தேதி வரை சிறப்பு மலை ரெயில் 6 நாட்கள் இயக்கப்படும்.
குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு ஊட்டிக்கு 9.40 மணிக்கு சென்றடையும். இதேபோல் ஊட்டியில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்பட்டு குன்னூருக்கு மாலை 5.55 மணிக்கு வந்தடையும். இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும்.
மேலும் ஊட்டியில் இருந்து கேத்திக்கு வரும் டிசம்பர் 28-ந் தேதியில் இருந்து ஜனவரி 2-ந் தேதி வரை 6 நாட்களுக்கு தினசரி 3 முறை மலை ரெயில் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதில் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், இரண்டாம் வகுப்பில் 130 இருக்கைகள் இருக்கும். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.