3 கோடி வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்- அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு
- தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்களில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.
- தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் செயல்திறனை மேற்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை:
தமிழ்நாடு சட்டசபையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு இந்த துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலுரை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் கடந்த 2 ஆண்டுகளில் 95 ஆயிரம் பழுதடைந்த மின் மாற்றிகளை மாற்றம் செய்து மின்சாரத்துறை சாதனை படைத்துள்ளது. மின்னகம் மூலம் 15 லட்சம் புகார்கள் பெறப்பட்டன. இதில் 99.5 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு மின்வாரியத்தின் கடன் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கோடியாக இருந்தது. 2 ஆண்டுகளில் கூடுதலாக ரூ.14 ஆயிரம் கோடி கடன் சேர்ந்துள்ளது. இதற்கு காரணம் வாங்கப்பட்ட கடன்களுக்கு செலுத்துகின்ற வட்டி ஆகும். இந்த கடன்களை முழுமையாக குறைத்திட வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுரைகள் வழங்கி இருக்கிறார்.
மின்சார வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டிய தேதி 1.12.2019 ஆகும். தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்ததை ஏற்படுத்தி இருக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் 7 முறை தொழிற்சங்கங்களுடன் நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. விரைவில் தொழிற்சங்கங்கள் விரும்ப கூடிய வகையில் திருப்திகரமான ஒப்பந்தம் ஏற்படும். அதற்கான உத்தரவுகளை முதலமைச்சர் வழங்கி உள்ளார்.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத புதிய வடிவமைப்புடன் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறார். அதற்கு டெண்டர் விடப்பட்டு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 3 கோடி வீடுகளில் இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவர் மின்சாரத்துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
* நடப்பு 2023-ம் ஆண்டில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள், சாதாரண வரிசை, சுயநிதி திட்டம், சிறப்பு முன்னுரிமை, தட்கல், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் திட்டங்களின் மூலம் வழங்கப்படும்.
* அரசு-தனியார் பங்களிப்புடன் 5 ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும்.
* தமிழ்நாட்டில் 72 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவப்படும்.
* தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்களில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.
* வடசென்னை அனல்மின் நிலையம் 1, 2-ன் செயல்திறனை மேம்படுத்துவதற்கான சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
* தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் செயல்திறனை மேற்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.
* மேட்டூர் அனல்மின் நிலையம் 1, 2 செயல் திறனை மேம்படுத்துவதற்கான சிறப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
* மின் பாதைகளில் ஏற்படும் பழுதுகளை கண்டறிவதற்கு டிரோன்கள் கொள்முதல் செய்யப்படும்.
* நெல்லை, ஸ்ரீரங்கம், கோவை, அவிநாசி, திருப்பரங்குன்றம், திருச்செங்கோடு, கரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தேர் ஓடும் மாட வீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.
* தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையால் சென்னை தலைமை செயலக வளாகம், பள்ளி கல்வி இயக்குனரகம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 100 கி.வாட் திறன் கொண்ட 2 சூரிய சக்தியின் மூலம் இயங்கும் வாகன மின்னூட்டல் நிலையங்கள் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.
மேற்கண்ட அறிவிப்புகளை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி வெளியிட்டார்.