பொள்ளாச்சியில் மாயமான சிறுமி மீட்பு
- சிறுமியின் பெற்றோர் மகளை கண்டித்து படிப்பை நிறுத்தினர்.
- சிறுமியை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பொள்ளாச்சி,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் சிறுமிக்கு திருப்பூரை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மாணவியின் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டனர்.
கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி சிறுமியை அவரது தாய், தனது தங்கை வீடான பொள்ளாச்சியில் கொண்டு வந்து விட்டார். 1 மாதத்திற்கும் மேலாக அங்கு தங்கி இருந்த சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி தனது வீட்டிற்கு சென்றார்.
சம்பவத்தன்று, சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் சிறுமி மட்டும் இருந்தார். சிறுமியின் பெற்றோர் மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது சிறுமி மாயமாகி இருந்தார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஆனைமலை போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்தனர்.
போலீசார் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமி, தனது காதலனுடன் திருப்பூரில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் திருப்பூர் விரைந்து சென்று சிறுவனுடன் இருந்த சிறுமியை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
மேலும் சிறுவன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.