உள்ளூர் செய்திகள்

தருமபுரி நகராட்சி வரி பாக்கியை விரைந்து வசூலிக்க நகராட்சி உத்தரவு

Published On 2023-02-16 09:33 GMT   |   Update On 2023-02-16 09:33 GMT
  • திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • ரூ.13 கோடியே 50 லட்சத்தை விரைந்து வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தருமபுரி,

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தருமபுரி நகராட்சி சந்தைப்பேட்டை வளாகத்தில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அறிவு சார் மையம் கட்டப்பட்டு வருகிறது.

இதேபோன்று தருமபுரி ஏ.எஸ்.டி.சி. நகரில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தருமபுரி முகமது அலி கிளப் ரோட்டில் உள்ள பழைய மார்க்கெட் வளாகத்தில் தனியார் பங்களிப்புடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தருமபுரி புறநகர் பஸ் நிலையத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் தருமபுரியில் பென்னாகரம் ரோட்டில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் தனியார் பங்களிப்புடன் தருமபுரி புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் நிலுவையில் உள்ளது.

இந்தநிலையில் சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா தருமபுரி நகராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து அவர் புதிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்குவது குறித்து, சென்னை நகராட்சி நிர்வாக இயக்குனரக கண்காணிப்பு பொறியாளர் பாண்டுரங்கன், சேலம் மண்டல செயற்பொறியாளர் கமலநாதன், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், தொழிலதிபர் டி.என்.சி. இளங்கோவன் மற்றும் துறை அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா ஆலோசனை நடத்தினார். அப்போது தருமபுரி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள வரி இனங்கள் மற்றும் வாடகை கட்டணம் ரூ.13 கோடியே 50 லட்சத்தை விரைந்து வசூலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

Tags:    

Similar News