ஓசூர் அருகே கர்ப்பமான பெண் கழுதையின் தலையை வெட்டிய மர்ம நபர்கள்: நரபலியா?
- கழுதை பாலை விற்பனை செய்தும் வருவாய் ஈட்டி வருகிறார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை.
ஓசூர்:
ஓசூர் அருகே கர்ப்பமான பெண் கழுதையின் தலையை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கழுதை நரபலி கொடுக்கப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்த கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (43). இவர் சலவை தொழில் செய்து வருகிறார்.
கிராமத்தில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் ஒரு கொட்டகை அமைத்து அங்கு 20-க்கும் மேற்பட்ட கழுதைகளை வளர்த்து வருகிறார்.
இந்த கழுதைகள் மூலம் கிடைக்கும் கழுதை பாலை அவர் விற்பனை செய்தும் வருவாய் ஈட்டி வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல ஆனந்த் ஏரிக்கரை ஓரத்தில் உள்ள தனது கொட்டகைக்கு சென்றுள்ளார். அங்கு கொட்டகையின் கேட் உடைக்கப்பட்டு இருந்து உள்ளது. அங்கிருந்த அனைத்து கழுதைகள் மீதும் ரத்தம் தெளித்து இருந்துள்ளது.
உடனே அவர் கொட்டாகைக்கு உள்ளே சென்று பார்த்தபோது ஒரு பெண் கழுதையின் கழுத்தை வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்துள்ளது. அதன் தலையை மர்ம நபர்கள் எடுத்து சென்றுள்ளனர். இதனால் ஆனந்த் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் ஓசூர் மத்திகிரி போலீஸ் நிலையத்தில் நள்ளிரவு நேரத்தில் கொட்டகைக்கு வந்த மர்ம நபர்கள் பெண் கழுதையின் கால்கள் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் தாக்கிய மர்ம நபர்கள் பின்னர் கழுதையின் கழுத்தை கத்தியால் அறுத்து தலையை எடுத்து சென்றுள்ளனர்.
நேற்று அமாவாசை என்பதால் மாந்திரீகம் செய்து பலி கொடுப்பதற்காக கழுதையின் தலையை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து சென்று உள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.