உள்ளூர் செய்திகள்

ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு

Published On 2023-05-19 07:07 GMT   |   Update On 2023-05-19 07:07 GMT
  • கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் கார் விற்பனைக்கு உள்ளதாக பிரபலமான ஆன்லைன் நிறுவன விளம்பரத்தில் பார்த்தார்.
  • காரை விலைக்குப் பேசி ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் செலுத்தி, மதுரையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் அந்த காரை ஓட்டி வந்தார்.

நாமக்கல்:

நாமக்கல் நடராஜபுரத்தை சேர்ந்தவர் சேகர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் கார் விற்பனைக்கு உள்ளதாக பிரபலமான ஆன்லைன் நிறுவன விளம்பரத்தில் பார்த்தார். அதில் உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார்.

அதன்பேரில் மதுரைக்குச் சென்று கார் விற்பனை நிறுவன உரிமை யாளர் சுதர்சன் என்பவரை சந்தித்துள்ளார். அவர் காட்டிய காரை விலைக்குப் பேசி ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் செலுத்தி, மதுரையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் அந்த காரை ஓட்டி வந்தார்.

அப்போது நடு வழியில் அந்த கார் பழுதாகி நின்றுவிட்டது. இதுகுறித்து காரை விற்பனை செய்த வருக்கு தகவல் தெரி வித்தபோது, அவர் ஒரு மெக்கானிக்கை அனுப்பி காரை எடுத்துச் சென்று விட்டார். காரை வாங்கிய சேகரையும், அவருடன் இருந்த இருவரையும் நாமக்கல் செல்லுமாறும், காரை ரிப்பேர் செய்து, நாமக்கல்லில் கொண்டு வந்து கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதனை நம்பி சேகரும் அவருடன் சென்றவர்களும் நாமக்கல் வந்துவிட்டனர்.

காரை வாங்கிய சேகர் பலமுறை காரை விற்ற சுதர்சனை தொடர்பு கொண்ட போதிலும், அவர் காரை சரி செய்து திருப்பி வழங்கவில்லை. இதனால் பாதிப்படைந்த சேகர், நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார். கடந்த மாதம் விசாரணை முடிவுற்றிருந்த நிலையில், நுகர்வோர் கோர்ட் உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் ராமராஜ் தீர்ப்பு வழங்கினார்.

அதில், பாதிக்கப்பட்ட சேகருக்கு அவர் செலுத்திய தொகை ரூ. 2 லட்சத்து 81 ஆயிரத்தை, 9 சதவீத வட்டி யுடனும், அவருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடு ரூ. 1 லட்சமும், வழக்கின் செலவு தொகையாக ரூ.19 ஆயிரமும் காரை விற்பனை செய்த சுதர்சன் 4 வார காலத்துக்குள், சேகருக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News