உள்ளூர் செய்திகள் (District)

கொல்லிமலையில் மரங்கள் வெட்டி கடத்தல்விசாரணை நடத்த கலெக்டர் அதிரடி உத்தரவு

Published On 2023-06-13 07:24 GMT   |   Update On 2023-06-13 07:24 GMT
  • நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை திகழ்கிறது.
  • இங்குள்ள வனப்பகுதியில் இருக்கும் மரங்களை வெட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக கொல்லிமலை திகழ்கிறது. இங்கு பலா, சில்வர் ஓக், தேக்கு உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில் இருக்கும் மரங்களை வெட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பட்டா நிலங்களில் உள்ள பல வருடங்கள் ஆன மரங்களை வெட்டி விற்க , நில உரிமையாளர்கள் விண்ணப்பித்தால் கலெக்டர், வன அலுவலர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, குறிப்பிட்ட மரங்களை மட்டும் வெட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

ஆனால், மரங்களை வெட்ட ஒரு பகுதியில் மட்டும் அனுமதி வாங்கிக்கொண்டு, கொல்லிமலையில் பல இடங்களில் சட்ட விரோதமாக வியாபாரிகள் மரங்களை வெட்டி கடத்திச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு கொல்லிமலை பகுதியில் பல்வேறு இடங்களில் வெட்டப்பட்ட மரங்களை 6 லாரிகளில் லோடு ஏற்றி, உள்ளே உள்ள மரங்கள் இருப்பது தெரியாமல், தார்பாய் போட்டு மூடி அடிவாரத்தில் உள்ள வனத்துறை சோதனைச்சாவடி அருகே நிறுத்தி வைத்திருந்தனர். பின்னர் நேற்று அதிகாலை, எவ்வித சோதனையுமின்றி எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள், பொதுமக்க ள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா கூறுகையில், இது தொடர்பாக மாவட்ட வன அலுவலரை உடனடியாக விசாரித்து, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் போலீசார் மூலம் கொல்லிமலையில் இருந்து வரும் வாகனங்களை சோதனையிட நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Tags:    

Similar News