சக்கில்நத்தம் மலை கிராமத்திற்கு புதிய பஸ் வசதி
- தமிழக முதல்-அமைச்சருக்கு கிராம நன்றி தெரிவித்தனர்.
- பூஜை செய்து இனிப்பு வழங்கி முதல் பயணத்தை தொடங்கி வைத்தனர்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சக்கில் நத்தம் மலை கிராமத்தில் 120 குடும்ங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இம்மலை கிராமத்திற்க்கு இது நாள் வரை பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரவும், மருத்துவமனைக்கு செல்லவும், வேலைக்கு சென்று வரவும் வாகனவசதி இல்லாமல் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.
எனவே இக்கிரா மத்திற்க்கு அரசு பஸ் வேண்டி நீண்ட காலமாக போராடி வந்த நிலையில் கடந்த வாரம் இது குறித்து தமிழக முதல் அமைச்சரின் தனிபிரிவிற்க்கு மனு அளித்திருந்தனர். இதையறிந்த தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் உடனடியாக இக்கிராமத்திற்க்கு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகத்திற்க்கு உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து இன்று 16-ம் எண் அரசு நகர பஸ் பாலக்கோட்டில் இருந்து கோட்டூர், கரகூர் வழியாக ஈச்சம்பள்ளம் சக்கில் நத்தம் கிராமத்திற்கு ஒதுக்கப்பட்டு போக்கு வரத்து துவக்கப்பட்டது. முதன்முதலாக கிராமத்திற்கு வந்த பஸ்சை ஊர் பொது மக்கள் அலங்கரித்து பூஜை செய்து இனிப்பு வழங்கி முதல் பயணத்தை தொடங்கி வைத்தனர். கோரிக்கையை ஏற்று உடனடியாக பஸ் வழங்கிய தமிழக முதல்வருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் பேவுஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ், ஊர்கவுண்டர்கள் முருகேசன், கோவிந்தராஜ், மந்திரி கவுண்டர்கள் மாதையன், ஜெய்சங்கர், மற்றும் ராஜா, நெடுமாறன் முன்ராஜ், கந்தசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.