உள்ளூர் செய்திகள்

ப.சிதம்பரத்தின் `கை' ஓங்கியது: மீண்டும் காங்கிரசின் கோட்டையாக மாறிய சிவகங்கை

Published On 2024-06-05 06:13 GMT   |   Update On 2024-06-05 06:13 GMT
  • காங்கிரஸ் சிவகங்கை தொகுதியில் வெற்றி வாகை சூடியது.
  • ப.சிதம்பரம் தான் சிவகங்கையின் அடையாளம் என்று மாறிப்போனது.

சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளுடன், புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம், ஆலங்குடி தொகுதிகளை உள்ளடக்கிய சிவகங்கை தொகுதியில் நீண்ட காலம் வென்ற கட்சி காங்கி ரஸ். பல முறை வென்று எம்.பி.யாக இருந்தவர் ப.சிதம்பரம். அ.தி.மு.க., தி.மு.க. என மாறி மாறி கூட்டணியில் இந்த தொகுதியை காங்கிரஸ் தொடர்ந்து தக்க வைத்து வந்துள்ளது.

திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடானை, இளையாங்குடி மற்றும் சிவகங்கை என 6 சட்டசபை தொகுதிகளை கொண்ட இத்தொகுதியில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிகம் என்பதால், அதே பின்புலத்தை கொண்ட ப.சிதம்பரத்தை மக்கள் 7 முறை மக்களவைக்கு அனுப்பியுள்ளனர்.

திருப்புவனம், புஷ்பவனம், குன்றக்குடி குடைவரை கோவில், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளிகோவில், மடப்புரம் காளியம்மன் கோவில், நாட்டரசன்கோட்டை, மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவில், இடைக்காட்டூர் இருதய மாதா கோவில் உள்ளிட்டட் பல கோவில்கள் நிறைந்த சிவகங்கை , ஆன்மீக பூமியாகவும், மருது பாண்டியர்கள், வேலுநாச்சியார் ஆட்சி செய்த வீரத்தின் விளைநிலமாகவும் உள்ளது.

சிவகங்கையில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும், பாசனத்திற்கு தேவையான நீர் இல்லை என்பதும், இங்கு புதிய தொழில்களை துவங்கி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், காரைக்குடி, திருப்பத்தூர் வழியாக திண்டுக்கல்லுக்கும், தொண்டி, சிவகங்கை வழியாக மதுரைக்கும் புதிய ரெயில் வழித்தடங்களை ஏற்படுத்த வேண்டும், காரைக்குடி செட்டிநாடு விமான நிலை யம் அமைப்பது, சிவகங்கை கிராபைட் உபதொழிற்சா லைகள் ஏற்படுத்துவது, சிங்கம்புணரியில் கயிறு வாரியம் அமைப்பது போன்ற கோரிக்கைகள் இம்மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக உள்ளன.

காங்கிரஸ் கட்சியினர் தான் இந்த தொகுதியில் கோட்டை அமைத்திருக்கிறது என்று கூறவே இயலாது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் கோட்டையாகவே தான் இது இருக்கிறது. இத்தொகுதி பிரிக்கப்பட்டு முதல் இரண்டு முறை நடைபெற்ற (1967-71, 1971-77) தேர்தல் களில் தி.மு.க.வை சேர்ந்த தா.கிருஷ்ணன் அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

77-80 காலகட்டத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பெரிய சாமி தியாகராஜன் என்ப வரை உறுப்பினராக மக்கள் தேர்வு செய்தனர். அதன் பின்பு காங்கிரஸ் அங்கு கோலூன்ற துவங்கியது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.வி.சுவாமிநாதன் அதன் பின்பு தேர்வு செய் யப்பட்டார். காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் என்று மாறி மாறி ப.சிதம்பரம் தான் சிவகங்கையின் அடையாளம் என்று மாறிப்போனது என்றாலும் மிகையாகாது.

காங்கிரசில் இருந்து ப.சிதம்பரம் பிரிந்திருந்த சம யத்தில் காங்கிரஸ் வேட்பா ளர் சுதர்சன நாச்சியப்பனை சிவகங்கையில் நிற்கவைத்து வெற்றி வாகை சூட வைத்தது காங்கிரஸ். பின்பு காங்கிர சில் மீண்டும் இணைந்தார் ப.சிதம்பரம். 2014 தேர்தலில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் இந்த தொகுதியில் வேட்பாளாராக காங்கிரஸ் சார்பில் களம் இறக்கப்பட்டார். தி.மு.க. சார்பில் சுப.துரைராஜூம், அ.தி.மு.க. சார்பில் செந்தில்நாதனும், பா.ஜ.க. சார்பில் எச்.ராஜாவும் நிறுத்தப்பட்டனர். அ.தி.மு.க.வைச் சேர்ந்த செந்தில்நாதன் 4,75,993 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

2014 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அந்த தேர்தலில் 2-வது இடத்தில் தி.மு.க.வு.ம், மூன்றாவது அணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.க. 3-வது இடத்தையும் பிடித்தன. சொந்த செல்வாக்கு இருந்தபோதிலும், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு 4-வது இடமே கிடைத்தது. ஆனால் கடந்த 2019 தேர்தலில் மீண்டும் ப.சிதம்பரத்தின் "கை" ஓங்கியது.

இதையடுத்து கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார். 2019-ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 5.50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா போட்டியிட்டார். அவருக்கு 2 லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் வரை கிடைத்தன.

அதே போல கடந்த முறை தனித்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி இம்முறை தி.மு.க. கூட்டணியில் இணைந்தது. தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியில் நிலவிய கோஷ்டி பூசல்கள், கார்த்தி சிதம்பரத்தின் சர்ச்சை பேச்சுகள் போன்றவை சிவகங்கை தொகுதியில் இம்முறை காங்கிரஸ் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தன.

ஆனால் அனைத்து யூகங்களையும் தகர்த்து ப.சிதம்பரத்தின் கை ஓங்கியதன் மூலம் இம்முறையும் காங்கிரஸ் இத்தொகுதியில் வெற்றி வாகை சூடியது. இதைத்தொடர்ந்து இம்முறையும் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று சிவகங்கை காங்கிரசின் கோட்டை என்பதை நிரூபணம் செய்துள்ளார்.

Tags:    

Similar News