உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து கிளை மேலாளரிடம் மனு கொடுத்த போது எடுத்த படம்.

செங்கோட்டை மேலூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு பஸ் வசதி செய்து தரக்கோரி மனு

Published On 2023-03-01 09:37 GMT   |   Update On 2023-03-01 09:37 GMT
  • கேசி ரோடு சாலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை நகர பஸ் இயக்கப்பட்டு வந்தது.
  • பஸ் வசதி இல்லாமல் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

செங்கோட்டை:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக செங்கோட்டை கிளை மேலாளாரிடம் செங்கோட்டை மேலூர் அரசு உயர்நிலை பள்ளியின் சார்பில் கோரிக்கை மனுவினை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜன் அளித்து உள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

செங்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மேலச் செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களான பிரானுார், பார்டர், சிலுவைமுக்கு, கதிரவன் காலனி, மூன்றுவாய்க்கால், ரெட்டைக்குளம், காடுவெட்டி, மோட்டை, கண்ணுப்புள்ளிமெட்டு, விசுவநாதபுரம், பெரிய பிள்ளைவலசை, மாவடிக் கால்தோப்பு, தேன் பொத்தை, ராஜபுரம்காலனி, மீனாட்சிபுரம், பண்பொழி, வடகரை, வாவாநகரம், அச்சன்புதுார், இலத்துார் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மாணவ-மாணவிகள் ஏராளமானோர் கல்வி பயின்று வருகின்றனா்.

மேலும் மேற்குதொடா்ச்சி மலை அடிவார பகுதிகளில் உள்ள மாணவ-மாணவிகளும் பயின்று வருகின்றனா். இப்பள்ளியானது செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு மேற்கே செல்லுகின்ற கேசி ரோடு சாலையில் சுமார் 1கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது.

இந்த சாலையில் மேலச்செங்கோட்டை அரசு தொடக்கப்பள்ளி, மூன்று வாய்க்கால், கண்ணுப்புள்ளி மெட்டு ஆகிய பகுதிகளில் அரசு உதவி பெறும் பள்ளி கள் அமைந்துள்ளது.

இந்த கேசி ரோடு சாலை யில் சுற்றுலா முக்கி யத்துவம் வாய்ந்த குண்டாறு நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. அந்த பகுதிகளில் உள்ள தனியார் எஸ்டேட்களுக்கு இங்கிருந்து கூலித் தொழிலாளா்கள் ஏராளமானோர் சென்று வருகின்றனா்.

இந்த கேசி ரோடு சாலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்புவரை நகர பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பஸ்கள் இயக்கப்படவில்லை. மேற்கு தொடா்ச்சிமலை அடிவார பகுதியிலிருந்து வருகை தரும் மாணவ, மாணவிகள் பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனா்.

எனவே கேசி.ரோடு சாலை வழியாக மேலச் செங்கோட்டை வழியாக காலை 8 மணிக்கு கண்ணுப் புள்ளிமெட்டுக்கு செல்லும் வகையிலும், 8.30மணிக்கு திரும்பி வரும் வகையிலும், அதேபோல் மாலை 4.15 மணிக்கு கண்ணுப்புள்ளி மெட்டுக்கு சென்று 4.45 மணிக்கு திரும்பி வரும் வகையிலும் பஸ் வசதி செய்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இதன்மூலம் மேற்கண்ட வாறு மாணாக்கர்களுக்கு வசதிகள் கிடைப்பதோடு கூடுதலாக மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கும் வாய்ப்புகள் ஏற்படும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தது.

Tags:    

Similar News