கால்நடைகளுடன் முற்றுகை போராட்டம்- காங்கயத்தில் விவசாயிகளை தடுத்து நிறுத்திய போலீசார்
- விவசாயிகள் ஆடு, மாடு, கோழி, குதிரை உள்ளிட்ட கால்நடைகளுடன் திருப்பூர் நோக்கி வருவதற்காக தயாராகினர்.
- வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம், வெள்ளகோவில், தாராபுரம், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் வெறி நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு சம்பவம் தொடர்ந்து வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
கடந்த 2 மாதத்தில் 200 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானதாகவும், இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
இதனைத்தொடர்ந்து உயிரிழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மாவட்டம் முழுவதும் தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும், விவசாயிகளுக்கான இழப்பீடு வழங்க அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதையடுத்து காங்கேயம் பகவதிபாளையம் அருகே ஏராளமான விவசாயிகள் ஆடு, மாடு, கோழி, குதிரை உள்ளிட்ட கால்நடைகளுடன் திருப்பூர் நோக்கி வருவதற்காக தயாராகினர். அவர்களை மாநகர எல்லையிலேயே தடுத்து நிறுத்துவதற்காக திருப்பூர் மாநகர எல்லை பகுதிகளான பொல்லிகாலிபாளையம், காசிபாளையம், முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் உள்ளிட்ட பகுதிகளில் மாநகர போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதே போல் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.