உள்ளூர் செய்திகள்

நொய்யல் ஆற்றில் சாயக்கழிவு நீர் கலப்பு- மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு

Published On 2025-02-27 14:34 IST   |   Update On 2025-02-27 14:34:00 IST
  • வாலிபாளையம் பகுதிகளில் உள்ள கெமிக்கல் விற்பனை நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
  • சுத்திகரிக்காத கழிவு நீரை சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டதும் கண்டறியப்பட்டது.

திருப்பூர்:

திருப்பூர் மந்திரி வாய்க்காலில் அவ்வப்போது சாயக்கழிவுநீர் பாய்ந்தோடுவது வழக்கமாக உள்ளது. இதுதொடர்பாக கடந்த மாதம் ஆய்வு நடத்திய மாசுகட்டுப்பாடு வாரிய பறக்கும்படை அதிகாரிகள், லட்சுமி நகரில் இயங்கிய ஒரு முறைகேடு பட்டன் - ஜிப் நிறுவனத்தை கண்டுபிடித்து, மின் இணைப்பு துண்டித்து நடவடிக்கை எடுத்தனர்.

கடந்த 10-ந்தேதி, வாலிபாளையம் பகுதிகளில் உள்ள கெமிக்கல் விற்பனை நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிறுவனங்கள் சாயக்கழிவுநீரை, சாக்கடை கால்வாயில் வெளியேற்றியது தெரிய வந்தது. இதனால் டைஸ் அண்டு கெமிக்கல் நிறுவனங்கள், பேக்கிங் பிரிவு மற்றும் ஆய்வகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என மாசுகட்டுப்பாடு வாரியம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஊத்துக்குளி ரோடு, குருவாயூரப்பன் கோவில் அருகே மந்திரி வாய்க்காலில் இளஞ்சிவப்பு நிறத்தில் சாயக்கழிவுநீர் பாய்ந்தோடியது. மேலும் நொய்யல் ஆற்றில் கலந்தது.

இதையடுத்து மாசுகட்டுப்பாடு வாரிய பறக்கும்படை பொறியாளர் லாவண்யா தலைமையிலான குழுவினர், நடத்திய ஆய்வில் கொங்கு மெயின் ரோடு, முத்துநகர் பகுதியில் 2 பிரின்டிங் நிறுவனங்கள் அனுமதி பெறாமல் இயங்கியதும், சுத்திகரிக்காத கழிவு நீரை சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்நிறுவனங்கள் இயங்கிய வாடகை கட்டிடங்களில் மின் இணைப்புகளை துண்டிக்க கலெக்டருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News