விராலிமலையில் 150 ஆண்டு பழமையானபத்திரப்பதிவு அலுவலகத்தை இடிக்க எதிர்ப்பு
- விராலிமலை பழைய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது.
- அலுவலகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட கருவறையில் பழங்கால ஓலைச்சுவடிகள், பட்டயங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
விராலிமலை
விராலிமலை பழைய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் நீதிமன்றமாக இயங்கி வந்த அந்த கட்டடம் காலப்போக்கில் பத்திரப்பதிவு அலுவலகமாக மாற்றப்பட்டு இன்றளவும் உறுதி தன்மையுடன் செயல்பட்டு வருகிறது.
பழங்கால பர்மா தேக்கு உள்ளிட்ட உறுதியான அக்கால பொருட்கள் கொண்டு கட்டப்பட்ட அந்த அலுவலக கட்டடம் இன்றும் உறுதி தன்மையுடன் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. மேலும், அலுவலகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட கருவறையில் பழங்கால ஓலைச்சுவடிகள், பட்டயங்கள் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
உதரணமாக கடந்த 1967- ம் ஆண்டு அண்ணா முதல்-அமைச்சராக இருந்த போது புதுக்கோட்டை நியூ இனாம் எஸ்டேட் ஒழிப்பு சட்டம் முன் வடிவுக்கு மன்னர் காலத்தில் எழுதி பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த செப்பு பட்டய ஆவணம் தற்போதைய விராலிமலை பத்திர பதிவு அலுவலகத்தில் உள்ள கருவறையில் இருந்து எடுக்கப்பட்டு சட்ட முன் வடிவுக்கு பின்னர் மீண்டும் கருவறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கட்டிடத்தை இடிக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த அலுவலக கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இதை கண்டித்து விராலிமலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்,சமூக நல அமைப்பினர், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் அலுவலகம் முன்பு ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா தலைமை வகித்தார்.
ஜெயராமன், அய்யாதுரை, மணி, ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட துணைச்செயலாளர் தர்மராஜன் பங்கேற்று ஆர்பாட்டத்தை தொடங்கிவைத்து கட்டடத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.
இதில், பழமை வாய்ந்த புராதன சின்னமாக போற்றி பாதுகாக்க வேண்டிய கட்டிடத்தை இடிக்கும் அரசின் முடிவை கைவிட வேண்டும் என்றும்.கட்டடம் அருகில் பயன்பாடற்று இருக்கும் இடத்தில் புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட வேண்டும், பழைய கட்டிடத்தை ஆவண காப்பகமாக பாதுகாக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.