உள்ளூர் செய்திகள்

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்ததாழ்வு மண்டலம் - கடலூரில் பரவலாக மழை

Published On 2024-12-11 07:27 GMT   |   Update On 2024-12-11 08:57 GMT
  • ஒரு சில இடங்களில் அதிகளவில் மழை பெய்து வருவதையும் காண முடிந்தது.
  • மீண்டும் மழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழும் அபாயமும் நிலவி வருகின்றது.

கடலூர்:

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புதுச்சேரிக்கு சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு இல்லை.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, 12-ந் தேதி காலை பலவீனமடையும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு புயல் காரணமாக மழை மற்றும் தென்பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூர் மாவட்டத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டிருந்த நிலையில் கடலூர், நெல்லிக்குப்பம், சிதம்பரம், பெண்ணாடம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக காலை முதல் மழை பெய்து வருகின்றது.

ஒரு சில இடங்களில் அதிகளவில் மழை பெய்து வருவதையும் காண முடிந்தது. இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குடைப்பிடித்த படியும், மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் மழையில் பலர் நனைந்த படி சென்றதைக் காண முடிந்தது.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தற்போது சிறிதளவு தண்ணீர் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள நிலையில் மீண்டும் மழை பெய்து வருவதால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழும் அபாயமும் நிலவி வருகின்றது.

இந்த நிலையில் தென்பெண்ணை கரையோரம் ஆங்காங்கே கரைகள் சேதமடைந்து தற்போது மணல் மூட்டைகள் அடுக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது. இருந்தபோதிலும் சாத்தனூர் அணையிலிருந்து மீண்டும் 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் முன்னெச்சரிக்கை பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது.

மேலும், இன்று முதல் 13-ந் தேதி வரை மழை இருக்கும் என்பதால் ஏற்கனவே பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ள நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் பெரும் கலக்கம் அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News