உள்ளூர் செய்திகள்

பிச்சாட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு: ஆரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2024-12-01 06:23 GMT   |   Update On 2024-12-01 06:23 GMT
  • பலத்த மழை காரணமாக பிச்சாடடூர் அணை நிரம்பி உள்ளது.
  • இன்று காலை 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர்:

ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் அணை உள்ளது. பலத்த மழை காரணமாக பிச்சாடடூர் அணை நிரம்பி உள்ளது. இதையடுத்து அணையில் இருந்து இன்று காலை 500 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டு உள்ளது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நீர்வளத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

பிச்சாட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்தும் சற்று அதிகமாக இருப்பதால், பாதுகாப்பு கருதி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநில அரசு இன்று (1-ந்தேதி)காலை 10 மணியளவில் உத்தேசமாக 500 கன அடி உபரி நீரை திறந்து விடுகிறது.

இதனால் ஆரணியாறு ஆற்றங்கரையோரம் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ளவர்களுக்கு வெள்ள அபாய முன் எச்சரிக்கை விடப்படுகிறது.

நீர் தேக்கத்திற்கு மழை நீரினால் வரத்து அதிகமாகும் பட்சத்தில் மிகை நீர் வெளியேற்றத்தின் அளவு படிப்படியாக உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்பொழுது ஆரணியாற்றின் குறுக்கே உள்ள அ.நாகுப்பம் அணைக்கட்டு, லட்சுமிபுரம் அணைக்கட்டு, அரெட்டி பாளையம் தடுப்பணைகள் மூலம் சராசரியாக 3200 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

எனவே ஆரணி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டை, தாராட்சி பேரண்டூர் 43யனப்பாக்கம், பாலவாக்கம், காக்கவாக்கம், செங்காத்தாகுளம், பெரியபாளையம், பாலவாக்கம், ஆர்.என்.கண்டிகை, அனந்தேரி, பேரிட்டிவாக்கம், வட தில்லை, மாம்பாக்கம், கல்பட்டு, மானந்தூர்.

தொளவேடு, மேல் மாளிகைப் பட்டு, கீழ் மாளிகைப்பட்டு, பெரியபாளையம், ராளப் பாடி, மங்களம் காரணி ஆரணி, போந்தவாக்கம், புதுவாயல், துறைநல்லூர், வைரவன்குப்பம், மேல்முதலம்பேடு, கீழ்முதலம்பேடு, பெருவாயல், ஏலியம்பேடு, பெரியகாவனம், சின்ன காவனம், பொன்னேரி, லட்சுமிபுரம், கம்மவார் பாளையம்.

பெரும்பேடு, வஞ்சி வாக்கம், வெள்ளோடை ஆலாடு, கொளத்தூர், குமாரசிறுலப்பாக்கம், மனோபுரம், அத்தமணஞ்சேரி, வேலூர், அ.ரெட்டிபாளையம், காட்டூர், தத்தமஞ்சி, கடப்பாக்கம், சிறுபழவேற்காடு. போலாச்சியம்மன்குளம், ஆண்டார்மடம், தாங்கல் பெரும்புலம் மற்றும் ஆரணி ஆற்றின் இருபுறம் உள்ள தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பலத்த மழையினால் பொன்னேரி ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் லட்சுமிபுரம் அணைக்கட்டு நிரம்பி 3250 கன அடி தண்ணீர் வெளியேறி மனோபுரம் ரெட்டிபாளையம் ஆண்டார் மடம் வழியாக பழவேற்காடு கடலில் கலக்கிறது. பொன்னேரி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 55 ஏரிகளில் 32 ஏரிகள் கொள்ளளவு நிரம்பி உள்ளன.

மீஞ்சூர் அடுத்த நாளூர் பத்மாவதி நகர்,இந்துஜா நகர், கலைஞர் நகர அத்திப்பட்டு புது நகர், நந்தியம்பாக்கம், பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம், ஏ.ஏ.எம். நகர், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட தாய்மான் செட்டி தெருவில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பொருட்கள் சேதம் அடைந்துள்ளன.

பொன்னேரி-பழவேற் காடு சாலை, திருவாயர்பாடி ெரயில்வே சுரங்க பாதையில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் பாலச்சந்தர் இளநிலை பொறியாளர் பரந்தாமன் மற்றும் ஊழியர்கள் 2 ராட்சதமின்மோட்டார்கள் மூலம் மழை நீரை வெளியேற்றி வருகின்றனர்.இதனை அமைச்சர் ஆவடி நாசர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பழவேற்காடுமற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பாலைவனம், அத்திப்பட்டு, பள்ளி பாளையம், வைரங்குப்பம் ஆலாடு பாதுகாப்பு மையத்தில் 507 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுக்கு தேவையான உணவு, பிரட் பிஸ்கட் போர்வை, உள்ளிட்டவைகளை அமைச்சர் சா.மு. நாசர், எம்.எல்.ஏக்கள் துரை சந்திரசேகர், டி.ஜே.எஸ்.கோவிந்தராஜன், சேர்மன் ரவி, பழவேற்காடு அலவி, ஆகியோர் வழங்கினர். அப்போது வட்டாட்சியர் மதிவாணன் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் பலர் உடன் இருந்தனர்.

சோழவரம் அடுத்த ஆத்தூரில் 2 குடிசை வீடுகள் சின்னம்பேடு, சோம்பட்டு பகுதியில் தலா ஒரு வீடு இடிந்து விழுந்தன. மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள், 5 மின்கம்பங்கள் சாய்ந்தன பழவேற்காடு கடற்கரையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 30-க்கும் மேற்பட்ட படகுகள் என்ஜின்கள், வலைகள், சேதமடைந்து உள்ளன. இன்று காலையும் பொன்னேரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது.

Tags:    

Similar News