மின்கட்டணத்தை உயர்த்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
- மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது.
- இந்த தடை உத்தரவு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது.
தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொதுமக்களிடையே கருத்து கேட்பு கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் சட்டத்துறை சார்ந்த உறுப்பினர் நியமிக்கும் வரை கட்டண உயர்வு தொடர்பாக முடிவெடுக்கவும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தவும் தடை விதிக்க கோரி, நூற்பாலைகள் சங்கம் மற்றும் சில நிறுவனங்கள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மின் கட்டண உயர்வு தொடர்பான மனு மீது இறுதி உத்தரவு பிறப்பிக்க தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக மின்வாரியம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிர், மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது என்றும், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தில் சட்டம் சார்ந்த உறுப்பினரை நியமிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த நிலையில் மின்கட்டண அறிவிப்பு வெளியிடும் நேரத்தில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பது பின்னடைவை ஏற்படுத்தி விட்டது என்றும் தெரிவித்தார். எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும், என்று அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து மின்கட்டணத்தை உயர்த்துவது சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்க தடை விதித்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த மேல்முறையீட்டு மனு குறித்து எதிர்தரப்பினர் அனைவரும் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இந்த உத்தரவு மூலம் மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு எடுப்பதற்கான தடை தற்காலிகமாக நீங்கி இருக்கிறது.