சீலநாயக்கன்பட்டி ரவுண்டானாவில்கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் வாகனங்கள்
- சேலம் மாநகராட்சி 90 சதுர கி.மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மாநகராட்சி பகுதியில் 10.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர்.
- சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் போக்குவரத்துக்கு தீர்வு காணப்படாத வகையில் கட்டப்பட்டதாக பலரும் குமுறலை தெரிவித்துள்ளனர்.
சேலம்:
சேலம் மாநகராட்சி 90 சதுர கி.மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. மாநகராட்சி பகுதியில் 10.50 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். சேலம் மாநகராட்சியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், கடை கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் முளைத்துள்ளன.
மேலும் தினமும் வெளி யூர், வெளிமாநி லங்களில் இருந்து 2.50 லட்சம் மக்கள் வந்து செல்லும் பகுதியாக சேலம் மாநகராட்சி விளங்கி வருகிறது.
சேலம் மாநகரின் முக்கிய புறவழிச்சாலைகளில் ஒன்றாக உள்ள சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை தினமும் பல்லாயிரக்கணக்கான இருசக்கர, 4 சக்கர, கன ரக வாகனங்கள் கடந்து சென்று வருகின்றன. பெங்களூரு, கோவையில் இருந்து சென்னை, திருச்சி, மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை கடந்து தான் சென்றாக வேண்டும்.
இதுபோன்ற சூழலில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் மேம்பாலம் போக்குவரத்துக்கு தீர்வு காணப்படாத வகையில் கட்டப்பட்டதாக பலரும் குமுறலை தெரிவித்துள்ள னர்.
கடும் போக்குவரத்து நெரிசல்
சேலம் நகர பகுதியில் இருந்து ஆத்தூர், கள்ளக்குறிச்சி, மல்லூர், ராசிபுரம், நாமக்கல், திருச்சி பகுதிகளுக்கும், ஈரோடு, கோவை மார்க்கமாகவும் செல்லும் வாகனங்கள் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை கடந்து சென்று வருகின்றன. சேலம் மாநகர வாகனங்களும், வெளிமாவட்டம் சென்று வரும் வாகனங்களும் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் ரவுண்டானாவை அதிகளவு பயன்படுத்தி வருகின்றன. மேலும் சேலம் மாநகரில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பஸ்களும் இந்த சாலையில் அதிகளவு இயக்கப்படுகிறது.
இதனால் காலை 8 மணி முதல் 10 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். இதில் பல கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அடிக்கடி அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதனால் நாமக்கல்லில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் சென்னையில் இருந்து வரும் வாகனங்கள் சீல நாயக்கன்பட்டி ரவுண்டாவை கடந்து செல்ல ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இதே நிலை அடிக்கடி நீடிக்கிறது. இதற்கு தீர்வு காணப்பட வேண்டுமானால் தாதகாப்பட்டி சாலையி லிருந்து நாமக்கல் பிரதான சாலை இணைக்கும் வகையில் பாலம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் சேலம் மாநகரம் முழுவதும் அதிகப்படியான பாலங்கள் கட்டப்பட்ட நிலையில் மிகவும் தேவைப்படக்கூடிய இந்த ரவுண்டானா பகுதியில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கான கூடுதலாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிக தீர்வாக ரவுண்டானா பகுதியில் கூடுதலாக போக்குவரத்து போலீசாரை பணியாற்றி நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.