உள்ளூர் செய்திகள்

படுகாயமடைந்த டிரைவர், கண்டக்டர்.

திண்டுக்கல் பஸ்நிலையத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டரை தாக்கிய மாணவர்கள்

Published On 2022-10-31 05:25 GMT   |   Update On 2022-10-31 05:25 GMT
  • கண்டக்டர் மாணவர்களை சாலையின் நடுவே செல்லாமல் ஓரமாக செல்லும்படி கூறியதால் மாணவர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
  • டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கியதில் படுகாயமடைந்தனர். புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டுக்கல்:

கன்னிவாடியில் இருந்து திண்டுக்கல் பஸ்நிலையத்திற்கு இன்று காலை அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை டிரைவர் திவாகரன்(32) ஓட்டிவந்தார். கண்டக்டராக வடிவேலு(46) என்பவர் பணியில் இருந்தார். பஸ் நிலையத்திற்குள் பஸ் வந்தபோது சாலையின் குறுக்கே ஒரு சில மாணவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

இதனால் டிரைவர் ஹாரன் அடித்துள்ளார். மேலும் கண்டக்டர் மாணவர்களை சாலையின் நடுவே செல்லாமல் ஓரமாக செல்லும்படி கூறியுள்ளார். இதனால் மாணவர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன்பின் பஸ் ரேக்கில் டிரைவர் நிறுத்திவிட்டு கண்டக்டருடன் சாப்பிட சென்றுவிட்டார். மீண்டும் அவர்கள் திரும்பி வந்தபோது மாணவர்கள் தங்கள் நண்பர்கள் மேலும் சிலரை அழைத்து வந்து டிரைவர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் சத்தம்போட்டும் அருகில் இருந்தவர்கள் யாரும் தடுக்க வரவில்லை. இதனைதொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். படுகாயமடைந்த அவர்கள் 2 பேரும் திண்டுக்கல் அரசுஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தகராறில் மாணவரின் சட்டைகாலர் கண்டக்டரின் கையில் சிக்கி கொண்டது. அதனை வைத்து நகர் வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில் திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே செயல்படும் பள்ளியை சேர்ந்த மாணவர்கள்தான் இந்த தகராறில் ஈடுபட்டது உறுதியானது.

இதனைதொடர்ந்து பள்ளி நிர்வாகத்துடன் ெதாடர்பு கொண்டு தகராறில் ஈடுபட்ட மாணவர்களை விசாரணை செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். பஸ்நிலையத்தில் டிரைவர் , கண்டக்டர் ஆகியோர் மாணவர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News