உள்ளூர் செய்திகள்

கோடை விழா ஏற்பாடுகள் தீவிரம்: ஊட்டியில் மலர் கண்காட்சி மே 19-ந் தேதி தொடங்குகிறது

Published On 2023-03-30 06:43 GMT   |   Update On 2023-03-30 06:43 GMT
  • மலைகளின் ராணியான நீலகிரிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
  • ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு நடைபெறும் மலர்க்கண்காட்சி 125-வது மலர் கண்காட்சி ஆகும்.

ஊட்டி:

மலைகளின் ராணியான நீலகிரிக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இருந்தாலும் கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெயிலை சமாளிப்பதற்காகவும், குளுகுளு காலநிலையை அனுபவிப்பதற்காகவும் வழக்கத்தை விட பல மடங்கு சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.

அவ்வாறு குவியும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அப்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கண்காட்சிகளும் நடத்தப்படும்.

இந்த ஆண்டுக்கான கோடை விழா மே மாதம் 6-ந் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான மலர் கண்காட்சி மே 19-ந் தேதி தொடங்குகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் இந்த ஆண்டு நடைபெறும் மலர்க்கண்காட்சி 125-வது மலர் கண்காட்சி ஆகும். மே 23-ந் தேதி வரை 5 நாட்கள் கண்காட்சி நடக்கிறது.

மலர் கண்காட்சியை போல் காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்டவைகளும் நடத்தப்பட உள்ளது. கோத்தகிரி நேரு பூங்காவில் மே 6, 7-ந் தேதிகளில் 12-வது காய்கறி கண்காட்சி, கூடலூரில் மே 12, 13, 14-ந் தேதிகளில் 10-வது வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் மே 13, 14, 15-ந் தேதிகளில் 18-வது ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மே 27, 28-ந் தேதிகளில் 63-வது பழக்கண்காட்சி நடக்கிறது.

இந்த தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்தார். மலர் கண்காட்சியில் பங்கேற்க கவர்னர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News