கோடை விடுமுறை- சென்னை விமானங்களில் கட்டணம் அதிரடி உயர்வு
- ரெயில், பஸ்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள்.
- ஜூன் முதல் வாரத்தில் சென்னையில் இருந்து பெரும்பாலான நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உள்ளது.
ஆலந்தூர்:
கோடை விடுமுறையையொட்டி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
ஏற்கனவே வரும் நாட்களுக்கான ரெயில் மற்றும் ஆம்னி பஸ்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்து விட்டன. ரெயில்களில் காத்திருப்போர் பயணிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
இதைத்தொடர்ந்து இப்போது பெரும்பாலானோர் தற்போது அரசு விரைவு பஸ்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அதிலும் தற்போது பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் இருக்கையை முன்பதிவு செய்யாமல் அவசரமாக கடைசி நேரத்தில் செல்லும் பயணிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
இதேபோல் ரெயில், பஸ்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். ஏற்கனவே உள்நாட்டு பயணத்துக்கு விமான பயணத்தை தேர்வு செய்வது அதிகரித்து உள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, கோவை, மும்பை, திருவனந்தபுரம், டெல்லி, கொச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது.
இதன் காரணமாக விமான டிக்கெட்டுகளின் கட்டணமும் அதிரடியாக உயர்ந்து உள்ளது. ஜூன் முதல் வாரத்தில் சென்னையில் இருந்து பெரும்பாலான நகரங்களுக்கு செல்லும் விமானங்களில் கட்டணம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை உள்ளது.
சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.6500 முதல் ரூ.10 ஆயிரம், திருச்சி-ரூ.4400 முதல் ரூ.8 ஆயிரம், கோவை-ரூ.3400 முதல் ரூ.5 ஆயிரம், கொச்சி-ரூ.5600 முதல் ரூ.8500, மும்பை-ரூ.4300 முதல் ரூ.7 ஆயிரம், டெல்லி-ரூ.6400 முதல் ரூ.13 ஆயிரம், திருவனந்தபுரம்-ரூ.3700 முதல் ரூ.6 ஆயிரம், தூத்துக்குடி ரூ.5 ஆயிரம் முதல் ரூ.9500 வரை உள்ளது.
இதேபோல் ஆம்னி பஸ்களில் கட்டணமும் அதிகரித்து உள்ளது. மதுரைக்கு ரூ.1090 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், திருச்சிக்கு ரூ.1600 முதல் ரூ.2700 வரையும், கோவை-ரூ.1400 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், தூத்துக்குடி-ரூ.950 முதல் ரூ.3 ஆயிரம் வரையும், கொச்சி-ரூ.1300 முதல் ரூ.3 ஆயிரம் வரையும், திருவனந்தபுரம்-ரூ.2500 முதல் ரூ.2700 வரையும் அதிகமாக உள்ளது.
ஆம்னி பஸ்கள் மற்றும் விமான டிக்கெட்டுகள் கட்டணம் உயர்வு காரணமாக சொந்த கார்கள் வைத்திருப்பவர் அதிலேயே தொலைதூர பயணம் மேற்கொள்வதும் அதிகரித்து உள்ளது. மேலும் வாடகை கார் டிரைவர்களை அமர்த்தியும் பயணம் செய்து வருகின்றனர்.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் அனைத்திலும் முன்பதிவு செய்து காத்திருக்கும் பயணிகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் 15-ந்தேதி வரை 50 முதல் 70 வரை உள்ளது. மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரெயிலில் ஜூன் 5-ந்தேதிக்கு பிறகே இருக்கைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.