கோடை சீசன் முடிந்தாலும் ஊட்டியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்
- ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.
- கோடை சீசன் முடிந்த பின்னரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.
ஊட்டி:
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் இயற்கை எழில்கள் நிறைந்தும், சுற்றுலா தலங்கள் நிறைந்தும் காணப்படும் பகுதியாகும்.
இங்குள்ள சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.
குறிப்பாக ஏப்ரல், மே உள்ளிட்ட கோடை மாதங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனையொட்டி ஆண்டுதோறும் கோடை விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோடைவிழா கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கி பழ கண்காட்சியுடன் முடிவடைந்து விட்டது.
கோடைவிடுமுறை முடிந்த பின்னரும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று கூட விடுமுறையை கழிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வந்திருந்தனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. அங்கு மலர் மாடத்தில் காட்சி வைக்கப்பட்டு இருந்த பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய மலர்களை பார்வையிட்டனர். அதன் பின்னணியில் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதுதவிர சுற்றுலா பயணிகள் பெரணி இல்லம் கண்ணாடி மாளிகைக்குள் சென்று பல்வேறு வகையான பெரணி செடிகளை அருகில் சென்று பார்த்து கண்டு ரசித்து செல்கின்றனர். இதே போன்று ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் தலையாகவே காணப்பட்டது.
சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நேற்று ஊட்டி சாலை, குன்னூர் சாலை, கோத்தகிரி சாலை, தொட்டபெட்டா மலைசிகரம் செல்லும் சாலை, தாவரவியல் பூங்கா சாலை உள்பட முக்கிய சாலைகள் அனைத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் மெல்ல மெல்லவே அடியெடுத்து வாகனத்தை ஓட்ட முடிந்தது.
கோடை சீசன் முடிந்த பின்னரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.