ஊட்டிக்கு 2 நாட்களில் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை
- 125-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் வருகிற 19-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.
- மலர்த்தொட்டிகளை மாடங்களில் அடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஊட்டி:
மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டத்துக்கு கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். கடந்த சில ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளாக நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இந்த ஆண்டு கட்டுப்பாடு எதுவும் இல்லாததாலும், சமவெளி பகுதியில் வெயில் அதிகம் சுட்டெரிப்பதாலும் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தற்போது அரசு துறைகள் சார்பில் நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த வாரம் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த 13-ந்தேதி ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
பல வண்ண மலர்களால் உருவான ஈபிள் டவர், கிரிக்கெட் மட்டை, பந்துடன் மைதானம், கால்பந்து, காலணியுடன் கூடிய மைதானம் மற்றும் மயில் உள்ளிட்ட பறவைகளின் உருவங்கள், மஞ்சள் பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண் உருவம் என உருவங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் ரோஜாக்களும் சுற்றுலாபயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளன. 2 நாட்களில் ரோஜா கண்காட்சியை 35 ஆயிரம் பேர் ரசித்து பார்த்துள்ளனர். 3 நாட்களாக நடந்த ரோஜா கண்காட்சி இன்று மாலை நிறைவுபெறுகிறது.
இதுதவிர அரசு தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம், லேம்ஸ்ராக் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் நீலகிரி மாவட்டத்துக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 125-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் வருகிற 19-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. அங்கு மலர்த்தொட்டிகளை மாடங்களில் அடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மலர் கண்காட்சியையொட்டி இந்த வாரம் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கலெக்டர் அம்ரித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையே கூடலூரில் நடந்து வாசனை திரவியக்கண்காட்சி நேற்று நிறைவடைவதாக இருந்தது. சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக கண்காட்சி மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.