ஊட்டியில் 5 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியை 1.22 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்
- 5 நாட்களில் ஊட்டி மலர் கண்காட்சியை 1 லட்சத்து 22 ஆயிரத்து 708 பேர் கண்டு ரசித்துள்ளனர்.
- நிறைவு விழாவையொட்டி பரிசளிப்பு விழா நடந்தது. தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சிபிலா மேரி வரவேற்றார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி கடந்த 19-ந்தேதி தொடங்கியது. கண்காட்சியை அமைச்சர் ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல ஆயிரம் வண்ண மலர்களை கொண்டு அலங்கார உருவங்கள் வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதுதவிர மலர்தொட்டிகளில் மலர்களும் பூத்து குலுங்கின.
கண்காட்சியின் சிறப்பம்சமாக 50 ஆயிரம் கார்னேஷன் மலர்களை கொண்டு 40 அடி அகலம், 48 அடி உயரத்தில் தேசிய பறவையான மயில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது.
இது பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுத்தது. மேலும் ஊட்டி 200-யை கொண்டாடும் வகையில் ஊட்டி 200 வடிவம், மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு உருவம், ஊட்டி தாவரவியல் பூங்கா உருவாகி 175-வது ஆண்டை குறிக்கும் வகையிலான உருவ வடிவம், குழந்தைகளுக்கு பிடித்த வனவிலங்குகள், பொம்மைகளின் உருவங்களும் இடம்பெற்றன.
இதுதவிர பூங்காவில் 35 ஆயிரம் மலர் தொட்டிகள் மற்றும் 125 நாடுகளின் தேசிய மலர்களும் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை காண நீலகிரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் கண்காட்சியை குடும்பத்துடன் பார்வையிட்டு ரசித்தனர்.
5 நாட்கள் நடந்த கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது. 5 நாட்களில் ஊட்டி மலர் கண்காட்சியை 1 லட்சத்து 22 ஆயிரத்து 708 பேர் கண்டு ரசித்துள்ளனர்.
நிறைவு விழாவையொட்டி பரிசளிப்பு விழா நடந்தது. தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சிபிலா மேரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
நடப்பு ஆண்டுக்கான தமிழ்நாடு தங்கசுடா் கவர்னர் சுழற்கோப்பை விருது வெலிங்டன் ராணுவ மையக் கல்லூரிக்கும், முதலமைச்சா் சுழற்கோப்பை விருது ஜென்சி கிஷோருக்கும் வழங்கப்பட்டது. ஊட்டி மலர் கண்காட்சி நிறைவு விழாவில் 36 சுழற்கோப்பைகள், 145 பேருக்கு முதல் பரிசு, 131 பேருக்கு 2-வது பரிசு, 30 பேருக்கு 3-வது பரிசு, 85 பேருக்கு சிறப்புப் பரிசுகள் உள்பட மொத்தம் 427 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் ராணுவ அதிகாரிகள் ஊட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மாயன் எ.மாதன், உதகை நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார், 4-வது வார்டு உறுப்பினர் அனிதாலட்சுமி, அரசு தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தாதேவி, மக்கள் செய்தி தொடர்பு துறை அலுவலர் சையதுமுகமது உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.