விபத்தில் பலியான மதுரை மாவட்ட ரசிகர் குடும்பத்துக்கு நடிகர் ஜெயம்ரவி ரூ. 5 லட்சம் உதவி
- செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் லாரி மோதி பலியானார்.
- இதுபற்றி தகவல் கிடைத்த போது நடிகர் ஜெயம்ரவி ஒரு படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் வரமுடியவில்லை.
திருப்பரங்குன்றம்:
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த நிலையூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் நடிகர் ஜெயம் ரவியின் மதுரை மாவட்ட ரசிகர் மன்ற தலைவராக செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் செந்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் லாரி மோதி பலியானார். இதுபற்றி தகவல் கிடைத்த போது நடிகர் ஜெயம்ரவி ஒரு படப்பிடிப்பில் இருந்ததால் அவரால் வரமுடியவில்லை.
இதை தொடர்ந்து சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அவர் நிலையூரில் உள்ள செந்திலின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் பலியான ரசிகர் செந்தில் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் ரசிகரின் குடும்பம் வறுமையில் இருப்பதை அறிந்த நடிகர் ஜெயம்ரவி, செந்திலின் மனைவியிடம் அவரது வங்கி கணக்கில் ரூ.5 லட்சம் வைப்புத்தொகை செலுத்துவதாகவும், மேலும் குழந்தைகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்பதாகவும் உறுதியளித்தார்.
நடிகர் ஜெயம் ரவி நிலையூர் பகுதிக்கு வந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் திரளாக வந்து ஜெயம்ரவியை பார்த்தனர்.