உள்ளூர் செய்திகள்

வியாசர்பாடியில் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து ஆட்டோ டிரைவர் பலி

Published On 2022-11-01 07:37 GMT   |   Update On 2022-11-01 07:37 GMT
  • சென்னையில் நேற்று பெய்த மழையில் மின்சாரம் பாய்ந்து ஆட்டோ டிரைவர் ஒருவர் பலியானார்.
  • புளியந்தோப்பில் இன்று காலை பால்கனி இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலியானார்.

பெரம்பூர்:

சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி 25-வது தெருவில் வசித்து வந்தவர் தேவேந்திரன் (55). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று மாலையில் மழை பெய்த போது ஆட்டோவில் வீட்டிற்கு சென்றார். மழை தொடர்ந்து பெய்ததால் வாடகைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

இரவு 8 மணியளவில் டிபன் வாங்குவதற்காக அருகில் உள்ள ஓட்டலுக்கு நடந்து சென்றார். அப்போது மழை லேசாக பெய்து கொண்டே இருந்ததால் குடை பிடித்து கொண்டு சென்றார்.

இந்த நிலையில் பி.பி.காலனி 18-வது தெருவில் ஒருவர் இறந்து போனதால் அவரது இறுதி சடங்கு மாலை 6 மணியளவில் நடந்து முடிந்து உள்ளது.

அந்த வழியாக ஆட்டோ டிரைவர் தேவேந்திரன் நடந்து சென்றபோது திடீரென மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். துக்க வீட்டிற்கு எடுக்கப்பட்ட மின்வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு உள்ளது. தெருவில் நடந்து சென்ற தேவேந்திரன் இதனை சற்றும் எதிர்பாராமல் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டார்.

இறந்துபோன தேவேந்திரனின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். அவரது மகள் தேவி பெரியமேடு போலீஸ் நிலையத்தில் போக்குவரத்து போலீசாக பணிபுரிந்து வருகிறார்.

இதேபோல புளியந்தோப்பில் இன்று காலை பால்கனி இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலியானார். பிரகாஷ்ராவ் காலனியில் வசித்து வருபவர் கபாலி. இவரது மனைவி சாந்தி (45). இருவரும் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வருகின்றனர். இன்று காலையில் வியாபாரத்திற்காக புறப்பட தயாரானார்கள்.

அப்போது சாந்தி குடிநீர் பிடித்து கொண்டிருந்தார். திடீரென பால்கனி இடிந்து அவர்மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தார்.

மோசமான நிலையில் இருந்த பால்கனி இரவு பெய்த மழையில் பலம் இழந்து இடிந்து விழுந்து உள்ளது.

விபத்து குறித்து பேசின் பிரிட்ஜ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News