6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விளை நிலத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்
- கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்ககூடாது என்று கிராம பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- பெரியபாளையம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் ஆறு வழிச்சாலைக்காக விளைநிலத்தை சமன் செய்யும் பணி தொடங்கியது
பெரியபாளையம்:
பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ரூ.3200 கோடி செலவில் 136 கிலோ மீட்டர் தூரத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த சாலை கண்ணிகை பேர், பெரியபாளையம், தண்டலம்,பாலவாக்கம், சென்னங்காரணி, பருத்தி மேனிகுப்பம், பனப்பாக்கம், பெரண்டூர், போந்தவாக்கம், வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.
இந்த சாலை அமைக்க பூர்வாங்க பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ள ஆயிரத்து 300 ஏக்கர் நஞ்சை நிலம் பாதிப்படையும். மேலும் 15-க்கும் மேற்பட்ட ஏரிகள், 30-க்கும் மேற்பட்ட குளங்கள் அழியும் அபாயம் உள்ளது. ஏழு கோவில்கள், 200 வீடுகள், இரண்டு அரசு பள்ளி கட்டிடங்களை இடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு தங்கள் கிராமங்கள் வழியாக 6 வழிச்சாலை அமைக்ககூடாது என்று கிராம பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆயினும் அதிகாரிகள் சாலை அமைக்கும் பூர்வாங்க பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை பெரியபாளையம் அருகே உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் ஆறு வழிச்சாலைக்காக விளைநிலத்தை சமன் செய்யும் பணி தொடங்கியது. இது பற்றி அறிந்த ஊத்துக்கோட்டை வட்ட நஞ்சை விவசாயிகள் சங்கத்தினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.
அவர்கள் பொக்லைன் எந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி. சாரதி தலைமையில் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் 6 வழிச்சாலையை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து விவசாயிகள் அனைவரும் விளைநிலத்தில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 10 கிராம விவசாயிகள் பங்கேற்று உள்ளனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.