விடுதியில் தங்கி படித்து வந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- பாதிரியார் கைது
- பெற்றோரிடம் விடுதி காப்பாளர் ஆண்ட்ரூஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவி தெரிவித்துள்ளார்.
- அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தனர்.
ஊத்துக்குளி:
திருப்பூர் ஊத்துக்குளியை அடுத்த கோணம்பட்டி பகுதியில் தனியார் விடுதி உள்ளது. இங்கு பள்ளி மாணவ, மாணவிகள் 10 பேர் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளகவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த விடுதியின் காப்பாளராக பாதிரியார் ஆண்ட்ரூஸ் என்பவர் இருந்து வந்தார்.
இந்தநிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் பகுதியை சேர்ந்த 9-ம்வகுப்பு படிக்கும் 14 வயதான மாணவி ஒருவரும் விடுமுறையில் வீட்டிற்கு சென்றார்.
அப்போது அவர் பெற்றோரிடம் விடுதி காப்பாளர் ஆண்ட்ரூஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்தனர்.
புகாரில் விடுதி காப்பாளரும் பாதிரியாருமான ஆண்ட்ரூஸ் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மாணவியை தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததுடன் வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பாதிரியார் ஆண்ட்ரூசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவிக்கு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.