தஞ்சை காமராஜ் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் திடீர் ஆர்ப்பாட்டம்
- வாடகை செலுத்தாத கடைகளின் மின் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.
- வியாபாரிகளின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகரின் மையப்பகுதியில் காமராஜ் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் சிறிய கடைகள் 200, பெரிய கடைகள் 300 என 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இதில் பெரிய கடைகளுக்கு மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் வரையும், சிறிய கடைகளுக்கு ரூ.6000 வரையும் மாநகராட்சி சார்பில் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் கடைகளுக்கு வாடகை அதிகமாக உள்ளது எனவும் அதனைக் குறைக்க வேண்டும் என வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் காமராஜ் மார்க்கெட்டில் சில கடை வியாபாரிகள் சில மாதங்களாக வாடகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வாடகை செலுத்தாத கடைகளின் மின் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.
கால அவகாசம் வழங்காமல் மாநகராட்சி அதிகாரிகள் எப்படி மின் இணைப்பை துண்டிக்கலாம்? எனக்கூறி இன்று காமராஜ் மார்க்கெட் வியாபாரிகள் ஒன்று திரண்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் முன்னறிவிப்பு இன்றி மாநகராட்சி அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்ததை கண்டித்தும், ஓராண்டுக்கான வாடகையை மொத்தமாக செலுத்த வேண்டும் என கூறியதை கண்டித்தும், கடை வாடகைகளை குறைக்க கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.
வியாபாரிகளின் இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்து தஞ்சை மேற்கு போலீசார் உடனே விரைந்து வந்து வியாபாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.