கார் கவிழ்ந்து சிறுவன் உட்பட 7 பேர் படுகாயம்
- திருமண முகூர்த்த புடவை எடுக்க சென்றபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்(வயது 37).
இவர் தனது உறவினர் திருமண விழாவிற்கு புடவை எடுக்க முடிவு செய்தார். அதன்படி குணசேகரன் தனது மனைவி ஜெயக்குமாரி (28), மகன் நிஷாந்த் (3), மற்றும் உறவினர்களான சுதா (34), எழிலரசி (37), உஷா (43), ஜான்சி ராணி (45) புவனேஸ்வரி (23) ஆகிய 7 பேருடன் திருமண முகூர்த்த புடவை வாங்க கொத்தூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி காரில் சென்றனர்.
காரை மேல் பச்சூர் பகுதியைச் சேர்ந்த கவுஸ்கர் (வயது 35) என்பவர் ஓட்டிச் சென்றார்.
கொத்தூர் அடுத்த மேலூர் டாஸ்மாக் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தரிக்கெட்டு ஓடி 3 பல்டி அடித்து தலைகீழாக குப்புற கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த, 3 வயது சிறுவன் உட்பட 7 பேர் பலத்த காயமடைந்தனர்.
காரில் சிக்கிக்கொண்ட அனைவரும் வலி தாங்க முடியாமல் கதறி துடித்து கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி மக்கள் ஓடிவந்து, குப்புற கவிழ்ந்த கார் கண்ணாடிகளை உடைத்து அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் ஜெயக்குமாரி, நிசாந்த், சுதா, எழிலரசி ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.