ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடக்கும் பள்ளி மாணவர்கள்
- ரெயில்வே மேம்பாலம் விரைவில் கட்டி முடிக்க வேண்டும்
- பொதுமக்கள் வலியுறுத்தி
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பச்சூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இதில் ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி - மல்லானூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பச்சூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இதனால் பச்சூர் ரெயில்வே மேம்பாலம் வழியாக பொதுமக்கள் செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகள் ரெயில் தண்டவாளத்தைக் கடக்க மிகவும் அவதிப்படுகின்றனர்.
மேலும் பள்ளி குழந்தைகள் மற்றும் மாணவர்கள் ஆபத்தான முறையில் ரெயில் தண்ட வாளத்தை கடந்து செல்லும் சுழல் உள்ளது.
சில சமயங்களில் மாண வர்கள் சைக்கிள்களுடன் தண்டவாளத்தை கடக்கும் போது திடீரென ரெயில் வந்துவிடுகிறது. இதனால் மாணவர்கள் பயத்துடனே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.
அதேபோல் பச்சூரில் ரெயில் நீண்ட நேரம் நிற்பதால், ரெயில் பெட்டிகளுக்கு இடையே உள்ள கப்ளிங் மீது ஏறியும், பெட்டிகளின் அடியில் புகுந்தும் ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனர்.
எனவே ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் முடியும் வரை, பள்ளி மாணவர்கள் சிரமமின்றி தண்ட வாளத்தை கடந்து செல்ல மாற்று பாதை பாதை அமைத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதியதாக கட்டப்பட்ட வரும் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.