தாராபுரம்-காங்கயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு - அ.தி.மு.க. நிர்வாகிகள்-தொண்டர்கள் குவிந்தனர்
- திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள், சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன.
தாராபுரம் :
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி, பழனி முருகன் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்து விட்டு சேலத்திற்கு புறப்பட்டார்.
உற்சாக வரவேற்பு :
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், காங்கயம் வழியாக சேலம் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று முதல் முறையாக வருகை தந்ததால் பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் காங்கயம் பஸ் நிலையம் அருகில் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு பொன்னாடை அணி வித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.
பிளக்ஸ் பேனர்கள் :
தாராபுரம் பஸ் நிலையம் அருகே திருப்பூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் சி.மகேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையொட்டி உடுமலை ரவுண்டானாவில் இருந்து அமராவதி சிலை வரை தாராபுரம் அ.தி.மு.க. நிர்வாகிகள் சார்பில் பிளக்ஸ் பேனர்கள், சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடி கம்பங்கள் நடப்பட்டிருந்தன. எடப்பாடி பழனிசாமி வருகையால் தாராபுரம், காங்கயம் நகரம் இன்று விழாக்கோலம் பூண்டன. காங்கயம் நகர்ப்பகுதி முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. காங்கயம் பேருந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகம் அருகே பெரிய அளவில் 40 அடி நீள பேனரும், மேடையும் அமைக்கப்பட்டு இருந்தது. காங்கயத்தில் இருந்து சென்னிமலை வழியாக எடப்பாடி பழனி சென்றதால் அந்த சாலையின் இருபுறங்களிலும் அ.தி.மு.க. கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன. ஒட்டுமொத்தமாக .அதி.மு.க. நிர்வாகிகள்,தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தடபுடலாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.