ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் குறித்து விழிப்புணர்வு - வங்கிகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு
- விபத்தால் ஏற்படும் நிரந்தர உடல் உறுப்பு செயலிழப்பு காப்பீடாக, 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு பெறலாம்.
- ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை பிரிமியம் செலுத்தலாம்.
திருப்பூர்,அக்.24-
ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம் குறித்து கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய அரசு, வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு சார்பில், ஆயுள் மற்றும் விபத்து காப்பீடு திட்டம், குறைவான பிரிமியத்துடன் செயல்படுத்தப்படுகிறது. பிரதமர் சுரக்ஷா காப்பீடு திட்டத்தில் 18 முதல் 70 வயது வரையுள்ள, வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் பயன்பெறலாம்.
விபத்தால் ஏற்படும் நிரந்தர உடல் உறுப்பு செயலிழப்பு காப்பீடாக, 2 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு பெறலாம்.ஆண்டு பிரிமியமாக 20 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்.பிரதமர் ஜீவன்ஜோதி காப்பீடு திட்டத்தில் 18 வயது முதல் 50 வயது வரையுள்ளவர்கள், 2லட்சம் ரூபாய் ஆயுள் காப்பீடு பெறலாம். ஆண்டு பிரிமியமாக 436 ரூபாய் செலுத்தி இணையலாம். காப்பீடுதாரர் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தினர் காப்பீடு தொகையாக இரண்டு லட்சம் ரூபாய் பெறலாம்.
வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள், ஆண்டுதோறும் ஜூன் 1 முதல் மே 31 வரை பிரிமியம் செலுத்தலாம். அவரது வங்கி கணக்கில் இருந்து பிரிமியம் பிடித்தம் செய்யப்படும். ஏழை மக்கள், வங்கி கணக்கு இருந்தால் இத்திட்டங்களில் பயன்பெறலாம்.கிராமப்புற மக்களுக்கு முழு அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி காப்பீடு செய்ய அறுவுறுத்த வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, 31ந் தேதி வரை, அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.