வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் வருகை பாதுகாப்பு குறித்து இந்து முன்னணியினர் ஆலோசனை
- வடமாநில தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாக, கலந்தாய்வு கூட்டம் இந்து முன்னணி சார்பில் நடந்தது.
- திருப்பூர் எப்போதும் வந்தாரை வாழ வைக்கும் நகரம், அச்சமின்றி தங்கி பணியாற்றலாம்.
திருப்பூர் :
திருப்பூரில் கடந்த மாதம் வடமாநிலத்தவர் குறித்தும் அவர்களது செயல்பாடுகள் குறித்து தேவையற்ற பிரச்சினை கிளப்பும் வகையிலான வீடியோக்கள் வதந்தியாக பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்த போலீ சார், இச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூருக்கு வந்த, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேரில் ஆய்வு செய்து, வடமாநிலத்தவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தார். இம்மாதம் 5-ந் தேதி கோவை - பீகார் இடையே கூடுதல் முன்பதிவில்லா பெட்டிகளுடன் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.இந்த சிறப்பு ரெயிலில் 1,350 வடமாநிலத்தவர் ஹோலி பண்டிகை கொண்டாட தங்கள் சொந்த மாநிலங்களுக்கு பயணமாகினர்.
பண்டிகை கொண்டாட்டம் முடிந்ததுடன், திருப்பூரில் எவ்வித பிரச்சினைகளும் இல்லாமல், இயல்பு நிலை நிலவுதால், சொந்த மாநிலம் சென்ற பலரும் ெரயிலில் திருப்பூர் திரும்பி வருகின்றனர். திருப்பூர் வழியாக பயணிக்கும் பல்வேறு தினசரி, வாராந்திர ெரயில்களில் அதிக அளவில் வடமாநிலத்தவர் திருப்பூர் நோக்கி வந்து கொண்டுள்ளனர். தொழிலாளர்கள் மீண்டும் திரும்புவதால் திருப்பூர் தொழில் துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர் பாதுகாப்பு தொடர்பாக, கலந்தாய்வு கூட்டம் இந்து முன்னணி சார்பில் நடந்தது.மாநில அமைப்பாளர் பக்தன், மாநில பொதுசெயலாளர் கிஷோர்குமார் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாநில தலைவர் காடஸ்வரா சுப்ரமணியம் பேசுகையில், திருப்பூர் எப்போதும் வந்தாரை வாழ வைக்கும் நகரம். அச்சமின்றி தங்கி பணியாற்றலாம். சமூக விரோதிகள் மற்றும் வெளிநாட்டு சக்திகள் இந்தியாவை சீர்குலைக்கும் முயற்சிக்கு யாரும் இடமளிக்க கூடாது. பிரிவினைவாதிகளை கண்டு பயப்பட தேவையில்லை என்றார்.
உத்திரபிரதேச இந்துமத் பொறுப்பாளர் சிவமூர்த்தி பேசுகையில், தமிழகத்தில் மொழி ஒரு பிரச்சினை இல்லை. தமிழர்கள் காசிக்கு வருகின்றனர். காசியில் இருந்து ராமேஸ்வரம் வந்து வணங்குகிறோம். எப்போதும் வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு வந்துவிடக்கூடாது என்றார்.