ஆயுத பூஜை- தீபாவளி கூட்ட நெரிசல் - திருப்பூரில் போலீசார் தீவிர கண்காணிப்பு
- வார இறுதி நாட்கள் மற்றும் தினமும் மாலை நேரங்களில் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
- மக்கள் வருகைக்காக நிறைய பொருட்களை வியாபாரத்துக்கு வர்த்தகர்கள் கடைகளில் நிரப்பி உள்ளனர்.
திருப்பூர்:
வருகிற 23-ந்தேதி சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகை நெருங்கி உள்ளது.இதனால் வார இறுதி நாட்கள் மற்றும் தினமும் மாலை நேரங்களில் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் பிரதான சாலைகளான புது மார்க்கெட் வீதி, குமரன் ரோடு, காதர்பேட்டை, பி.என்., ரோடு, பல்லடம், காங்கயம் ரோடுகளில் ஜவுளி, மின்னணு சாதனங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், மொபைல் போன் கடைகள் உட்பட பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் மெல்ல, மெல்ல கூட்டம் அதிகமாகி வருகிறது.
மக்கள் வருகைக்காக நிறைய பொருட்களை வியாபாரத்துக்கு வர்த்தகர்கள் கடைகளில் நிரப்பி உள்ளனர். தற்காலிக துணி, பலகார கடைகள், நடைபாதை கடைகள் முளைத்துள்ளன. நாளை முதல் குமரன் ரோடு உள்ளிட்ட ரோடுகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், சீராக வாகனங்கள் செல்லும் வகையில் போலீசார் ஆலோசனை செய்து நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளியையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் போது, பயணிகள் எளிதாக நின்று ஏறும் வகையில், தற்காலிக பஸ் நிலையம் ஏற்படுத்துவது, போக்குவரத்து மாற்றம் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளுடன் மாநகர போலீசார் ஆலோசனை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. போலீசார், வருவாய்துறை, போக்குவரத்து துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அனைத்து துறையினர் பங்கேற்ற கூட்டம் நடந்தது.அதில், மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டது. தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி கொடுக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடக்கும் கூட்டங்களில் பல்வேறு அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், அதிகம் மக்கள் கூடும் இடத்தில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட உள்ளது. கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. பிக்பாக்கெட், நகை பறிப்பு குற்றவாளிகளை கண்டறியும் வகையில் மக்கள் கூடும் இடம், பஸ்களில் மப்டி போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றனர்.