ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோவில்களுக்கு கம்பு, கேழ்வரகு வழங்க கோரிக்கை
- ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.
- கோவில்களில் கூழ் வார்ப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கு தானியங்கள் தேவை உள்ளது.
திருப்பூர், ஜூலை.16-
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இவற்றில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் பயனடைந்து வருகின்றன. இந்தநிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மன் கோவில்களுக்கு கம்பு, கேழ்வரகு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து கோவில் பூசாரிகள் நலச்சங்க மாநில தலைவர் வாசு கூறியதாவது:-
ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.இம்மாதத்தில் பெண் பக்தர்கள் விரதமிருந்து அம்மனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆடி மாதம் துவங்கவுள்ள நிலையில், அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளிக் கிழமைகளில் கூழ் வார்க்கும் நிகழ்ச்சி மிக முக்கியமானது.கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக, கோவில்களில் விழாக்கள், நிகழ்ச்சிகள் கொண்டாடப்படவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின் வரவுள்ள ஆடி மாத விழாவை சிறப்பாக கொண்டாடி நோய் நொடிகளின்றி வாழ அம்மனை வழிபட வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதற்கிடையே கோவில்களில் கூழ் வார்ப்பு நிகழ்ச்சி நடத்துவதற்கு தானியங்கள் தேவை உள்ளது. இதற்காக ஆடி வெள்ளி வழிபாட்டுக்காக, ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள அம்மன் கோவில்களுக்கு கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை வழங்கி தமிழக அரசு உதவ வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.