கால அளவை குறிப்பிட்டு ஜாப் ஒர்க் கட்டண ஒப்பந்தம் - ஆர்பிட்ரேசன் கவுன்சில் அறிவுறுத்தல்
- கட்டண தொகைகளை நீண்ட நாட்களுக்கு வழங்காமல், காலதாமதம் செய்வதும் வாடிக்கையாக உள்ளது.
- வரும் நாட்களில் இத்தகைய பிரச்சினைகள் உருவாவதை தவிர்க்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், நிட்டிங், டையிங், பிரின்டிங், எம்ப்ராய்டரி என 10க்கும் மேற்பட்ட ஜாப்ஒர்க் துறைகளை சர்ந்தே ஆடை ரகங்களை தயாரிக்கின்றன. பெரும்பாலான ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப்ஒர்க்நிறுவனங்களுக்கான கட்டண தொகைகளை உடனடியாக வழங்குவதில்லை. 30 முதல் 60 நாட்கள் கால இடைவெளியிலேயே வழங்குகின்றன.
சில ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஜாப்ஒர்க் கட்டண தொகைகளை நீண்ட நாட்களுக்கு வழங்காமல், காலதாமதம் செய்வதும் வாடிக்கையாக உள்ளது.கொங்குநகர் பகுதியில் உள்ள ஒரு ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனம், ராயபுரத்தில் இயங்கும் சாய ஆலையிடம் துணிக்கு சாயமேற்றுவதற்கு ஆர்டர் வழங்கியுள்ளது. துணிக்கு சாயமேற்றிய ஆலை, கட்டண தொகையை உடனடியாக வழங்கக்கோரியுள்ளது.
ஆடை உற்பத்தி நிறுவனத்தினரோ,கட்டண தொகையை, 40 நாட்களில் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.இதையடுத்து உடனடியாக தொகை வழங்கினால் மட்டுமே சாயமேற்றிய துணி வழங்கப்படும் என சாய ஆலை நிறுவன தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய இருதரப்பினரும் ஆர்பிட்ரேசன் கவுன்சிலை நாடியுள்ளனர்.
இது குறித்து ஆர்பிட்ரேசன் கவுன்சில் தலைவர் கருணாநிதி கூறியதாவது:-
ஆர்டர் வழங்கும்போதே, கட்டணத்தை 40 நாட்களுக்கு பின்னர் வழங்குவதாக வாய்வழியாக பேசி முடிவு செய்ததாக ஆடை உற்பத்தி நிறுவன தரப்பினர் தெரிவிக்கின்றனர். சாய ஆலை துறையினரோ, இதை மறுத்ததால் பிரச்சினை ஏற்பட்டுவிட்டது.
ஆடை உற்பத்தி- ஜாப்ஒர்க் நிறுவனங்கள், ஆர்டர் முடிவு செய்யும்போது ஜாப்ஒர்க் கட்டண தொகைகளை நிர்ணயித்து ஒப்பந்தம் மேற்கொள்கின்றன. இந்த ஒப்பந்தத்திலேயே, கட்டண தொகையை உடனடியாக அல்லது குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்குவது குறித்த விவரங்களையும் எழுத்துப்பூர்வமாக, ஆவணமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.எந்த விதத்திலும் வாய் பேச்சு வாக்குறுதிகள் செல்லுபடியாகாது. வரும் நாட்களில் இத்தகைய பிரச்சினைகள் உருவாவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.