இரவின் நிழல் திரைப்படத்துக்கு வரி விலக்கு - காங்கயம் நகா்மன்ற கூட்டத்தில் தீர்மானம்
- காங்கயம் நகரில் உள்ள திரையரங்குகளிலும் இப்படம் ஒருவாரம் திரையிடப்பட்டது.
- நகா்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா்சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா்.
காங்கயம்:
தமிழ்த் திரைப்பட இயக்குநா் ஆா்.பாா்த்திபன் இயக்கி, நடித்த இரவின் நிழல் திரைப்படம் கடந்த ஜூலை 15 ந் தேதி தமிழகம் முழுவதும் வெளியானது. 'நான் லீனியா் சிங்கிள் ஷாட்' படம் என்ற வகையில் எடுக்கப்பட்ட இப்படம் பலதரப்பினராலும் பாராட்டப்பட்டது.இந்தப் படத்துக்கு ஆா்.பாா்த்திபன் கேளிக்கை வரிவிலக்கு கோரி தமிழக அரசிடம் விண்ணப்பித்திருந்தாா்.காங்கயம் நகரில் உள்ள திரையரங்குகளிலும் இப்படம் ஒருவாரம் திரையிடப்பட்டது.
இந்நிலையில் திருப்பூா் மாவட்டம், காங்கயம் நகா்மன்றக் கூட்டம் நடைபெற்றது.நகா்மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா்சூரியபிரகாஷ் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா்வெங்கடேஷ்வரன், நகா்மன்ற துணைத் தலைவா்கமலவேணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் ஆா்.பாா்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து நகராட்சி ஆணையா் வெங்கடேஷ்வரன் கூறியதாவது:-
திரைப்படத்துக்கு கேளிக்கை வரிவிலக்கு அளிப்பது குறித்த தமிழ்நாடு உள்ளாட்சி அதிகார அமைப்புகளின் கேளிக்கை வரிச் சட்டத்தின்படி, இரவின் நிழல் படத்துக்கு வரிவிலக்கு கோரி தமிழக அரசிடம் இயக்குநா் ஆா்.பாா்த்திபன் கோரிக்கை விடுத்திருந்தாா். இக்கோரிக்கை மனு மீதான உள்ளாட்சி நகா்மன்றங்களின் முடிவினை அனுப்பிவைக்குமாறு சென்னை நகராட்சி இயக்குநா் கடிதம் மூலம் தெரிவித்திருந்தாா்.இதையடுத்து, நடைபெற்ற காங்கயம் நகா்மன்றக் கூட்டத்தில் இரவின் நிழல் படத்துக்கு வரிவிலக்கு அளித்து ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றாா்.