கருக்கலைப்புக்கு ஒப்புதல் அளிக்க தனி குழு அமைக்க உத்தரவு
- நம் நாட்டில் மருத்துவ ரீதியான கருக்கலைப்பு மேற்கொள்ள சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
- குழுவினர் விண்ணப்பங்களை ஆய்வு செய்து உரிய காரணங்கள் இருந்தால் கர்ப்பிணிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து உரிய முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது
திருப்பூர்:
நம் நாட்டில் மருத்துவ ரீதியான கருக்கலைப்பு மேற்கொள்ள சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் அதற்கென தனி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் ஒரே ஒரு வாரியம் செயல்படுவதால், உரிய நேரத்தில் விண்ணப்பங்களுக்கு முடிவெடுக்க முடியாத நிலை உள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கருக்கலைப்பு அனுமதி வழங்குவதற்கென தனி வாரியம், குழு அமைக்க சுகாதாரத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதன்படி திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் தலைமையில், மகப்பேறு மற்றும் பெண்கள் நல டாக்டர், பச்சிளம் குழந்தைகள் நலன் நிபுணர், கதிரியக்கவியல், குழந்தைகள் இதய நலன் மற்றும் நரம்பியல் ஆகிய துறைத்தலைவர்கள், மனநல ஆலோசகர், மருத்துவமனை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாரிய குழுவினர் விண்ணப்பங்களை ஆய்வு செய்து உரிய காரணங்கள் இருந்தால் கர்ப்பிணிக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்து உரிய முடிவுகளை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.