அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் நெல் அறுவடை பணி தொடங்கியுள்ளது
- நடவு செய்த நெல் வளர்ந்து அறுவடைக்கு தயாராகியுள்ளது.
- ஒரே சமயத்தில் இப்பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
உடுமலை:
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிபுத்தூர்,சோழமாதேவி, கணியூர், காரத்தொழுவு, கடத்தூர் ஆகிய 8 ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட 7,520 ஏக்கர் நிலங்களுக்கு, அணையிலிருந்து கடந்த ஜூன் 1ல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனையடுத்து விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி பணியை துவக்கினர். தற்போது இப்பகுதிகளில் நடவு செய்த நெல் வளர்ந்து அறுவடைக்கு தயாராகியுள்ளது.கணியூர், சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்து கடத்தூர், கண்ணாடிபுத்தூர் பகுதிகளிலும் அறுவடையை துவக்க விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
ஒரே சமயத்தில் இப்பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு தேவையான அறுவடை எந்திரங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.தொழிலாளர்கள் பற்றாக்குறையால் எந்திர அறுவடைக்கு விவசாயிகள் தயாராக உள்ள நிலையில், மடத்துக்குளம் வட்டார பகுதிகளில் பருவ மழையும் துவங்கியுள்ளது.
இதனால் அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்கள் பாதித்து வருகின்றன. நெல் வயல்களில், தாள்கள் தலைசாய்ந்து, நெல் மணிகள் வயல்களிலேயே உதிர்ந்து, பெரும் இழப்பை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
எனவே பருவ மழைக்கு முன், விளைந்த நெல் அறுவடை செய்யும் வகையில் தேவையான அளவு நெல் அறுவடை எந்திரங்களை கொண்டு வர வேளாண் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் விளைவித்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் துவக்கப்பட்டுள்ளது.இங்கு நெல்லுக்கான ஆதார விலை சன்ன ரகம் குவிண்டாலுக்கு ரூ. 2,203 மற்றும் ஊக்கத்தொகை ரூ.107 என ஒரு குவிண்டால் 2,310 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.அதே போல் பொது ரகம் ஆதார விலை, ரூ.2,183, ஊக்கத்தொகை ரூ.82 என ஒரு குவிண்டால் நெல் 2,265 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது, அறுவடை துவங்கியுள்ள நிலையில் விவசாயிகள் கொள்முதல் மையத்தில் பதிவு செய்து வருகின்றனர். கணியூர், கடத்தூர், காரத்தொழுவு, சோழமாதேவி பகுதி விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.