திருவள்ளூர் மாவட்டத்தில் 311 ஏரிகள் நிரம்பின
- புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் 581 ஏரிகள் உள்ளன.
திருவள்ளூர்:
வேலுார் மாவட்டத்தில், தக்கோலம் வழியாக வரும் கல்லாறு, திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் கேசாவரம் அணைக்கட்டு பகுதியில் கூவம் ஆறு, கொசஸ்தலை ஆறு என இரு ஆறுகளாக பிரிகிறது.
கேசாவரம் அணைக் கட்டில் நீர் நிரம்பினால் நேரடியாக கொசஸ்தலை ஆற்றில், செல்லும் நீர் பூண்டி ஏரிக்கு செல்கிறது.
இந்த அணைக்கட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையில் தற்போது அணைக்கட்டில் மழைநீர் நிரம்பி நீர் வெளியேறி வருவதால் கொசஸ்தலை, கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதேபோல் இந்த அணைக்கட்டின் இன்னொருபுறம் அமைக்கப்பட்ட 16 ஷட்டர்கள் வழியாக செல்லும் நீர் கூவம் ஆறாக மாறி பேரம்பாக்கம், மணவாளநகர், அரண்வாயல், புதுச்சத்திரம் வழியாக ஜமீன் கொரட்டூர், பருத்திப்பட்டு, மதுரவாயல், கோயம்பேடு வழியாக 75 கிலோ மீட்டர் சென்று நேப்பியர் பாலம் அருகே வங்க கடலில் கலக்கும்.
இந்நிலையில் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை புதுச்சத்திரம் கூவம் ஆற்றின் நடுவே உள்ள புதுச்சத்திரம் தரைப்பாலம் முழ்கி நீர் செல்வதால் புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் புதுச்சத்திரம் இருந்து திருநின்றவூர் வழியாக செல்லும் வாகனங்கள் பூந்தமல்லி சென்று செல்கின்றனர். இதேபோல் திருநின்றவூரில் இருந்து புதுச்சத்திரம் வரும் வாகனங்கள் திருவள்ளுவர் வந்து செல்கின்றன.
வாகனங்கள் 20 கி.மீ, துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 581 ஏரிகள் உள்ளன. இதில் 311 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும் 75 சதவீதமும், 185 ஏரிகள் 50 சதவீதமும், 67 ஏரிகள் 25 சதவீதம் 18 ஏரிகள் நிரம்பியுள்ளன.