உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசிய காட்சி.

மு.க.ஸ்டாலின் வருகையின்போது கொடி பேனர்கள் வைக்கக்கூடாது - அமைச்சர் துரைமுருகன் பரபரப்பு பேச்சு

Published On 2022-06-14 10:25 GMT   |   Update On 2022-06-14 10:25 GMT
  • புதிய பஸ் நிலைய திறப்பு விழாவிற்கு மு.க.ஸ்டாலின் வருகை
  • உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

வேலூர்:

வேலூரில் வருகிற 21-ந் தேதி புதிய பஸ் நிலைய திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

இதில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதனையொட்டி உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் அரியூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.

இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது;-

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு சிலரை நான் நேரில் வாழ்த்தியிருக்கிறேன்.தற்போது ஒட்டுமொத்தமாக அனைவரையும் பார்க்க வேண்டும்.வாழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூட்டத்தை கூட்டி இருக்கிறேன்.

உள்ளாட்சி தேர்தலில் எதிரிகள் கழகத் துரோகிகளை சமாளித்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இது சாதாரணமானது அல்ல‌.நீங்கள் வெற்றி பெற்ற பகுதி வளர்ச்சியடைய வேண்டும். அதற்கான செயலில் ஈடுபட வேண்டும்.

தமிழக அளவில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பெரிய மாநாட்டை நாமக்கல்லில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்த உள்ளார்.இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

கடந்த 10 ஆண்டு ஆட்சியில்ரூ.7 லட்சம் கோடி கடன் வைத்து விட்டு சென்று விட்டார்கள். இந்த கடன் சுமையுடன் ஆட்சி பீடத்தில் மு க ஸ்டாலின் அமர்ந்திருக்கிறார். நிதி கஷ்டத்தை மக்களிடத்தில் கூற முடியாது.

நிதியை சமாளிப்பது எப்படி என்று கருணா நிதியின் மகனுக்கு தெரியும். பல்வேறு இடங்களில் மனு கொடுத்த மக்கள் எதுவும் நிறைவேறாமல் முதல்அமைச்சர் வருகையின்போதாவது விமர்சனம் கிடைக்குமா என்ற நோக்கத்தில் மனு கொடுத்திருக்கிறார்கள். இதில் அதிக அளவில் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும் என கலெக்டரை கேட்டுக்கொள்கிறேன்.

56 ஆண்டுகள் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி. அதற்கு அடுத்தபடியாக 53 ஆண்டுகள் நான் சட்டசபையிலேயே இருக்கிறேன். நிதியில் கரை கண்டவர் கருணாநிதி. அவரது மகன் கூர்ந்த மதி நுட்பத்தால் ஆட்சி தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

கொரோனா வந்தது. ஊசி போடுவதற்கு அதிக செலவாகிவிட்டது. வெள்ளம் வந்து எல்லாத்தையும் அடித்துச் சென்றுவிட்டது. தற்போதும் வெள்ள நிவாரண நிதி வழங்கி கொண்டிருக்கிறோம்.

ஆட்சியில் நிதிநிலையில் சரியாக நடத்திக் கொண்டிருப்பவர் மு.க. ஸ்டாலின்.

திராவிடர் கழகம் மற்றும் திமுகவிற்கு உயிரோட்டம் கொடுத்தது வேலூர் மாவட்டம்தான்.

நிதி ஆதாரம் இருந்தால் 95 சதவீத மனுக்களுக்கு நலத்திட்ட உதவி கொடுக்க முடியும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை யின்போது வழிநெடுகிலும் நின்று அவரை பிரமாண்டமாக வரவேற்க வேண்டும்.எந்த காரணத்தைக் கொண்டும் கொடி பேனர்கள் தோரணங்கள் கட்டக்கூடாது. மலர்களை தூவி கோஷத்துடன் வரவேற்க வேண்டும்.

தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கும் மற்றும் கூட்டுறவு திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.சூசகமாக சொல்கிறேன். விரைவில் நல்ல முடிவு வரும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி, எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News