- சாம்பிராணி தூவ தீ மூட்டியபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம், ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 71). 2 பேரும் தனியாக வசித்து வந்தனர். சண்முகம் நேற்று சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார்.
ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் உள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு தனியாக இருந்தார்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று ராஜேஸ்வரி வீட்டில் உள்ள பூஜை அறையில் பூஜை செய்து உள்ளார். அப்போது சாம்பிராணி புகை தூவுவதற்காக மரக்குச்சிகளை தீயிட்டு எரித்தார்.
எதிர்பாராத விதமாக தீ அருகில் இருந்த பஞ்சு மெத்தைக்கு பரவியது. பஞ்சு மெத்தை சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்ததால் வீடு முழுவதும் கரும்பு புகை மண்டலம் சூழ்ந்தது.
தீயை அணைக்க ராஜேஸ்வரி வீட்டில் உள்ள குளியலறைக்கு சென்று தண்ணீர் கொண்டு வந்தார். இருப்பினும் வீடு முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்ததால் ராஜேஸ்வரி மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார்.
வீட்டில் புகை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் சென்று கதவை திறக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. இது குறித்து அந்த பகுதி மக்கள் குடியாத்தம் போலீஸ் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராஜேஸ்வரி மயங்கிய நிலையில் கிடந்தார்.
அப்போது அங்கே வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.
ராஜேஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.