உள்ளூர் செய்திகள்

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

Published On 2024-12-01 05:31 GMT   |   Update On 2024-12-01 05:31 GMT
  • சுற்றுலாப் பயணிகள் தரைப்பாலத்தை கடக்க தடை.
  • நீர் இருப்பு 3023 மி.கன அடியாக உள்ளது.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

மேலும் தேனி, மதுரை மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் திகழ்கிறது. அணையின் நீர்மட்டம் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த மாத தொடக்கத்தில் 65 அடியை எட்டியது.

முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு மழை அளவு படிப்படியாக குறையத் தொடங்கியது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மற்றும் அவ்வப்போது பெய்யும் மழை நீரால் வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 56.82 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 612 கன அடி தண்ணீர் வருகிறது. நீர் இருப்பு 3023 மி.கன அடியாக உள்ளது.

இந்நிலையில் வைகை அணையில் இருந்து சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கிருதுமால் உபவடி நிலத்திற்கு குடிநீர் தேவைக்காக சிறப்பு நிகழ்வாக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வைகை அணையில் கூடுதல் இருப்பாக உள்ள 1.68 டி.எம்.சி. தண்ணீரில் இன்று முதல் 8 நாட்களுக்கு வினாடிக்கு 650 கன அடி வீதம் 0.45 டி.எம்.சி.க்கு மிகாமல் தண்ணீரின் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து நீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை அணையில் இருந்து கூடுதல் பாசனத்துக்கான தண்ணீர் மற்றும் குடிநீருக்கு என 2219 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது.


அணையின் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்வதால் இரு புறங்களிலும் அடைக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

தரைப்பாலத்தை கடந்து பூங்காவிற்கு செல்ல முடியாமல் அவர்கள் ஏமாற்றமடைந்தனர். இருந்த போதும் சிலர் வாகனங்கள் மூலம் பாலத்தை சுற்றி எதிர்புறம் சென்றனர்.

எனவே கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி நீர்வளத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரித்துள்ளனர்.

அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News