2 மூதாட்டிகளிடம் நகை பறித்த பெண் கைது
- வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வந்து குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.
- தண்ணீரை வாங்கி குடித்த அந்த பெண், எட்டம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்து சென்றார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, நெட்டையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் எட்டம்மாள் (வயது 63).
மூதாட்டியிடம் நகை பறிப்பு
இவர் கடந்த செப்டம்பர் மாதம் 6-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வந்து குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். தண்ணீரை வாங்கி குடித்த அந்த பெண், எட்டம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்து சென்றார்.
இது குறித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் எட்டம்மாள் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை பறித்து சென்ற பெண் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல் பரமத்தி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ராசாபாளையம் சுங்கச்சாவடி அருகே உள்ள புலவர் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாயி (65).
கடந்த ஆகஸ்ட் மாதம் 26-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் பாப்பாயிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார். பின்னர் அருகில் உள்ள ஒரு கோயிலுக்கு பொங்கல் வைத்து அன்னதானம் செய்ய வந்துள்ளதாகவும், வாழை இலை தேவைப்படுவதால் வாழை இலை வேண்டும் என கேட்டுள்ளார்.
மேலும் வீட்டில் மாந்திரீகம் செய்யப்பட்டு உள்ளதாகவும், பூஜை நடத்தினால் சரியாகி விடும் என்று கூறியுள்ளார். இதை நம்பிய மூதாட்டி பாப்பாயி, பூஜை செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து பூஜையை தொடங்கிய அந்த அடையாளம் தெரியாத பெண், நகைகளை பூஜையில் வைக்குமாறு கூறியுள்ளார்.
பின்னர் பூஜை முடிந்ததும், பூஜை செய்த பொருட்களை மூதாட்டியிடம் வெளியே போட்டு விட்டு வருமாறு கூறியுள்ளார். மூதாட்டி பூஜை பொருட்களை வெளியே போடுவதற்காக சென்றதும், அந்த பெண் பூஜையில் இருந்த 2 பவுன் நகையை எடுத்து கொண்டு மாயமாகி விட்டார்.
இது குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மீண்டும் கைது
இந்த இரு வழக்குகள் சம்பந்தமாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சேலம், பெரியகொள்ளப்–பட்டியைச் சேர்ந்த சரவணன் மனைவி மைதிலியை(43) சிறையில் இருந்து விசாரணைக்காக வேலூர் போலீசார் அழைத்து வந்தனர்.
இதில் நெட்டையாம்–பாளையத்தை சேர்ந்த மூதாட்டி எட்டம்மாள், புலவர் பாளையத்தைச் சேர்ந்த பாப்பாயி ஆகியோரிடம் நகைகளை திருடியதை மைதிலி ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மைதிலியை கைது செய்த போலீசார், மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.