சுவையான சுவாரசியம்... கமகமக்கும் காபி
- ஆரம்பத்தில் காபியை குடிக்கவில்லை; அப்படியே சாப்பிட்டார்கள் ஆப்பிரிக்க பழங்குடிகள்.
- கச்சா எண்ணெயை அடுத்து உலக நாடுகளிடையே அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருள் காபிதான்.
தேநீருக்கு அடுத்து உலகில் அதிகம் பேர் சுவைக்கும் உற்சாக பானமான காபி பற்றி சில தகவல்கள்...
* எத்தியோப்பிய ஆடு மேய்ப்பவர்கள்தான் முதன்முதலில் காபி தரும் உற்சாகத்தை அறிந்தவர்கள். அவர்கள் மேய்த்த ஆடுகள், காபி கொட்டையை பழத்தோடு தின்றதும் உற்சாகமாக நடனம் புரிவதைப் பார்த்தனர். 'இதற்குள் ஏதோ இருக்கிறது' என காபி கொட்டையை மனிதர்கள் தின்பதற்கு வழிகாட்டியவர்கள் அவர்களே..!
* ஆரம்பத்தில் காபியை குடிக்கவில்லை; அப்படியே சாப்பிட்டார்கள் ஆப்பிரிக்க பழங்குடிகள். காபி கொட்டை மீது கொழுப்பு நிறைந்த உணவுகளைப் பூசி, உடலுக்கு சக்தி தரும் உற்சாக உருண்டையாக மென்று சாப்பிட்டார்கள்.
* பூமத்திய ரேகையை ஒட்டிய மற்றும் கீழே இருக்கும் நாடுகளில்தான் காபி விளைகிறது. அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் மட்டும் காபி பயிரிடப்படுகிறது.
* 1675-ம் ஆண்டில் இங்கிலாந்தில் காபி ஷாப்களுக்கு மன்னர் தடை விதித்தார். அங்கே பலரும் கூடி தனக்கு எதிராக சதி செய்வதாக அவர் பயந்தார்.
* உலகில் 70 சதவீதம் மக்கள் அராபிகா காபியையும், 30 சதவீதம் மக்கள் ரோபஸ்டா காபியையும் அருந்துகிறார்கள். ரோபஸ்டாவில் கசப்பு கொஞ்சம் அதிகம்.
* காபிச்செடி 30 அடி உயரத்துக்கு வளரக்கூடியது. ஆனால் காபிக்கொட்டைகளைப் பறிப்பது சிரமம் என்பதால், 10 அடி தாண்டி வளர விடுவதில்லை.
* தயாரிக்கும் முறையைப் பொறுத்து அமெரிக்கானோ, எஸ்பிரஸோ, மோச்சா, கப்புசினோ என பல ரகங்கள் காபியில் உண்டு.
* கச்சா எண்ணெயை அடுத்து உலக நாடுகளிடையே அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருள், காபிதான்..!
* காபியில் இருக்கும் 'கஃபைன்' நமது உடலுக்குள் போனதும் டோபமைன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. அதோடு பிட்யூட்டரி சுரப்பியும் தூண்டப்பட, அது அட்ரினல் சுரப்பிக்கு அர்ஜன்ட் மெசேஜ் அனுப்புகிறது. இதையடுத்து அது அட்ரினலினை அதிகமாக சுரந்து உடலுக்குள் பாய்ச்சுகிறது. காபி குடித்ததும் உற்சாகம் பிறக்கக் காரணம் இதுதான்!