ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை எனில் ரூ.10,000 அபராதம்: அரியானா அரசு அறிவிப்பு
- ஆம்புலன்சுக்கு வழிவிடாது இடையூறு செய்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
- 10 ஆயிரம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
சண்டிகர்:
அரியானா மாநிலம் குருகிராமில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து ஆணையர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து துணை ஆணையர் விரேந்தர் விஜி கூறியதாவது:
மோட்டார் வாகனச் சட்டம் 194-இ பிரிவின் கீழ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் இடையூறு செய்பவர்களுக்கு ரூ.10,000 அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.
இந்த அவசரகால சேவை வாகனங்களுக்கு வழிவிடாத நபர்களை சாலையில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணித்து அவர்களுக்கு உடனடியாக ஆன்லைன் மூலம் அபராத ரசீது அனுப்பப்படும் என தெரிவித்தார்.
ஏற்கனவே குருகிராம் போக்குவரத்து போலீசார் பல்வேறு மருத்துவமனைகளுக்கு உறுப்புகளை எடுத்துச்செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு பசுமை வழித்தடங்களை அமைத்து தீவிர நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர்.